எதிர்கால இந்தியா மின்சார வாகனங்களில் தான் சவாரி செய்யப்போகிறது. மின்சார வாகனங்களின் பயன்பாடு வந்துவிட்டால் காற்று சுத்தமாகும். இரைச்சல் இருக்காது. அதோடு, கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடும் தொகை மிகப்பெரிய அளவில் குறையும்.
மத்திய அரசின் அறிவிப்பின்படி அனைத்தும் நடக்குமானால், தொழில்துறைகளுக்கான பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்வதில் சீனா முன்னிலை வகிப்பதுபோல், மின்சார வாகன உற்பத்தியில் இந்தியாவும் முன்னிலை வகிக்கும்.
விற்பனை சரிவு:
இந்தியாவின் முதல் மின்சார எஸ்.யூ.வி ரக வாகனத்தை ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ஆனால் இந்த வாகனம் கடந்த ஆகஸ்ட்டில் 130 மட்டுமே விற்பனையானது. அரசாங்கத்தின் ஆதரவு இருந்தாலும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பது சவாலானது என்பதை இது நமக்கு உணர்த்துகிறது.
காரணங்கள்:
உள்கட்டமைப்பு வசதிகள் பற்றாக்குறை, வங்கிகள் கடன் வழங்க தயங்குவது, மின்சார கார்களை வாங்குவதில் அரசுத் துறைகள் ஆர்வம் காட்டாதது என மின்சார கார்கள் விற்பனை சரிவுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. புளூம்பெர்க் ஆய்வறிக்கையின்படி, கடந்த 6 ஆண்டுகளில் 8 ஆயிரம் மின்சார கார்களே இந்தியாவில் விற்பனையாகியுள்ளன. அதேநேரத்தில், இதற்கும் அதிகமான கார்கள் சீனாவில் இரண்டே நாட்களில் விற்பனையாகின்றன.
இந்தியாவில் மின்சார கார்களுக்கு உள்ள சந்தை வாய்ப்பை புறக்கணித்துவிட முடியாது. ஏனெனில், இங்கு ஆயிரம் பேருக்கு 27 கார்கள் தான் உள்ளன. ஆனால், ஜெர்மனியில் ஆயிரம் பேருக்கு 570 கார்கள் உள்ளன. ஜப்பானின் சுசூகி மோட்டார் கார்பரேஷனின் தயாரிப்பான மாருதி கார்களுக்கு இந்த சந்தை தான் மிகப்பெரிய வாய்ப்பை அளித்துக் கொண்டிருக்கிறது. அதனால் தான், இந்தியாவில் விற்கப்படும் 2 கார்களில் ஒன்று மாருதியாக இருக்கிறது.
விலை வேறுபாடு:
இருந்தும் அடுத்தாண்டில்கூட, மாருதி தனது மின்சார கார்களை அறிமுகப்படுத்தப் போவதில்லை. டாடா மோட்டார்ஸூம், மகிந்திராவும் தான் அடிப்படை அளவிலான மின்சார வாகனங்களை தற்போது தயாரிக்கிறார்கள். அதுவும் மிகக் குறைவாக. அவை பெரும்பாலும் அரசாங்கப் பயன்பாட்டுக்காகவே தயாரிக்கப்படுகின்றன.
பேட்டரி ரீசார்ஜ் தட்டுப்பாடு:
கோனா கார்களை வாங்கக்கூடிய வசதி உள்ளவர்களுக்கும்கூட, அவற்றை சார்ஜ் செய்வது ஒரு பிரச்னையாக உள்ளது. ஏனெனில், மின்சார கார்களுக்கான பேட்டரிகளை சார்ஜ் செய்யும் நிலையங்கள் 2018 வரை 650தான் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேநேரத்தில், சீனாவில் 4 லட்சத்து 56 ஆயிரம் சார்ஜ் செய்யும் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மக்கள் மின்சார கார்களை வாங்க விரும்புகிறார்கள் என்பதை உறுதியாக சொல்ல முடியும். எனினும், போதுமான பேட்டரி சார்ஜ் மையங்கள் இல்லாதது மின்சார கார்களின் விற்பனைக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.
வேலை இழப்பு:
மின்சார கார்களை வாங்குபவர்கள் வீட்டிலேயேகூட பேட்டரிகளை சார்ஜ் செய்து கொள்ள முடியும். எனினும், அத்தகைய வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் அதன் விலை. மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் வரை, மின்சார கார்களை வாங்குபவர்களுக்கு வங்கிகள் கடன் வழங்க தயங்கும். எனவே, மின்சார வாகன விற்பனை பெருமளவில் அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்.
தரமான மின்சாரம்
தற்போதுள்ள கார்களில் உள்ள பல்வேறு உதிரி பாகங்கள் இதற்குத் தேவைப்படாது. இதனால், மின்சார கார்கள் பெருகும்போது உதிரி பாகங்களின் விற்பனை வெகுவாகக் குறையும். தற்போதைய எரிபொருள் கார்களுக்கான உதிரி பாகங்களின் விற்பனையால் டீலர்கள் அதிகம் பயன்பெறுகிறார்கள். அவர்கள் தங்களுக்கு ஏற்படும் இழப்பை பொருத்துக் கொள்வார்களா?
எனவே, மின்சார கார்களை உற்பத்தி செய்பவர்கள் ஒருமுறைக்கு இருமுறை நிச்சயம் யோசிப்பார்கள். எரிபொருள் காரில் இருந்து மின்சார கார்களுக்கு மாறுவதற்கு கார் உற்பத்தியாளர்கள் எந்தளவுக்கு ஆர்வம் காட்டுவார்கள் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இதில் மற்றொரு விஷயமும் அடங்கி இருக்கிறது. போதுமான அளவிற்கு தரமான மின்சாரத்தை உற்பத்தி செய்யாத வரை, முழுமையான மின்சார கார்களைக் கொண்ட நாடாக நாம் உருவெடுக்க முடியாது.
வேண்டுகோள்:
இதுமட்டுமின்றி எரிபொருள் விற்பனையின் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 1.90 லட்சம் கோடி ரூபாய் வரி வருவாய் கிடைக்கிறது. நிதி நிலை அறிக்கை தயாரிப்பவர்களுக்கு இந்த இழப்பு நெருக்கடியை தராதா?