இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன்கள் என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. வீடுகள், அலுவலகங்கள் என எல்லா இடங்களிலும் ஸ்மார்ட்போன்கள் நமது 11ஆவது விரல் போல ஒட்டிக்கொள்கிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக ஸ்மார்ட்போன் பயனாளர்களைக் கொண்ட ஒரு நாடாக இந்தியா திகழ்கிறது. மற்ற நாடுகளைப் போல அல்லாமல் இந்திய பயனர்கள் ஒருசில குறிப்பிட்ட விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள்.
இது குறித்து CyberMedia Research என்ற ஆய்வு நிறுவனம் இந்தியாவின் ஆறு நகரங்களில் இருக்கும் 18 முதல் 30 வயதான இரண்டாயிரம் ஸ்மார்ட்போன் பயனாளர்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், ஸ்மார்ட்போன்களில் எந்த வசதி உங்களுக்கு முக்கியமானது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, பெரும்பாலான பயனாளர்கள் பேட்டரி திறன் என்றே கூறியுள்ளனர். அதைத் தொடர்ந்து கேமரா வசதிக்கு பயனாளர்கள் அதிக முக்கியத்துவம் அளிப்பதாக CyberMedia Research தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக CyberMedia Research நிறுவனத்தின் பிரபு ராம் கூறுகையில், "தற்போது வீட்டிலிருந்து வேலைசெய்யும் சூழல் அதிகரித்துள்ள வேளையில், அலுவலக ரீதியாக அதிக நேரம் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதற்கும் சரி, குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் வீடியோ காலில் பேசவும் சரி ஸ்மார்ட்போன் பேட்டரி திறன் முக்கியப் பங்கு வகிக்கிறது. பொதுமக்கள் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கும் பேட்டரி, அத்துடன் பேட்டரி வேகமாக சார்ஜ் செய்யும் ஃபாஸ்ட் சார்ஜ் வசதி ஆகியவற்றை முக்கியமானதாகக் கருதுகின்றனர் ”என்றார்.
தங்களுக்குத் தேவையான புதிய ஸ்மார்ட்போன்களை பொதுமக்கள் எவ்வாறு தேர்வு செய்கிறார்கள் என்பது குறித்து CyberMedia Research நிறுவனத்தின் தொழில்துறை ஆலோசனைக் குழுவின் தலைவர் சத்யா மொஹந்தி, "ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் என்னதான் புதிய தொழில்நுட்பங்களை அளித்தாலும் ஸ்மார்ட்போனின் பேட்டரி போன்ற அடிப்படையான விஷயங்களுக்கே பொதுமக்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஒரு ஸ்மார்ட்போனை வாங்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்வதில், அதன் போட்டரி திறன் முக்கியப் பங்கு வகிக்கிறது" என்றார்.
இதையும் படிங்க: டிஜிட்டலில் பணம் செலுத்துபவர்களா நீங்கள்? - சைபர் காப்பீடு பெறுவது எப்படினு தெரிஞ்சுக்கோங்க?