கடந்த ஏப்ரல் 2012இல் ஷீனா (24) என்பவரை அவரது தாயார் இந்திராணி, டிரைவர் ஷியாம்வர் ராய், கன்னா ஆகியோர் காரில் வைத்தே கழுத்தை நெரித்து கொலை செய்து வனப்பகுதியில் உடலை எரித்துள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் காவல் துறையினர் கண்டுப்பிடித்து சிறையில் அடைத்தனர். தற்போது, இந்திராணியை மத்திய மும்பையில் உள்ள பைகுல்லா பெண்கள் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், இந்திராணி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் அபாயம், மருத்துவ பிரச்னைகளை குறிப்பிட்டு 45 நாள்களுக்கு ஜாமீன் கோரியுள்ளார்.
மேலும் அதில், கடந்த ஆகஸ்ட் 2015 முதல் சிறையிலிருக்கிறேன். உடல் ரீதியாக பல்வேறு பிரச்னைகள் உள்ளன. உயர் ஆற்றல்மிக்க குழு வழங்கிய வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு, நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இவர் ஏற்கனவே நான்கு முறை மருத்துவ அடிப்படையில் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், வரும் 26ஆம் தேதி சிபிசிஐடி தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.