கரோனா வைரஸ் : சீனா, ஹாங்காங் செல்லும் விமானங்களை ரத்து செய்யும் இண்டிகோ - இண்டிகோ கொரோனா வைரஸ்
டெல்லி : கரோனா வைரஸ் பாதிப்பு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், இந்தியாவிலிருந்து சீனா, ஹாங்காங்குக்கு செல்லும் விமானங்கள் பிப்ரவரி 1ஆம் தேதி ரத்து செய்யப்படுவதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும் கரோனா வைரஸ் என்ற தொற்றுநோய் சீனாவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சீனாவை தவிர்த்து ஹாங்காங், தாய்லாந்து, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட் நாடுகளிலும் கரோனா வைரஸ் பரவியுள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்த அபாயகரமன சூழலில் இந்தியாவிலிருந்து சீனா, ஹாங்காங் செல்லும் விமானங்கள் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சீனாவில் கரோனோ வைரஸ் பரவி வரும் சூழலில், எங்களது வாடிக்கையாளர்கள், விமான குழுவினரின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ஆகையால், பெங்களூரு-ஹாங்காங் வழித்தடத்தில் இயங்கும் விமானங்கள் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் - 20ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
இந்தத் தேதிகளில் முன்பதிவு செய்திருந்த வாடிக்கையாளர்களின் பணம் மீண்டும் அளிக்கப்படும் " எனக் கூறப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து 155 விமானங்களில் இந்திய வந்த மொத்தம் 33 ஆயிரத்து 552 பயணிகள் விமான நிலையத்திலேயே மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.