இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ தனது ஊழியர்களுக்கு 25% வரை ஊதியத்தைக் குறைக்கவிருப்பதாக முன்னர் அறிவித்திருந்த நிலையில், தனது முடிவை தற்போது திரும்பப் பெற்றுள்ளது. நிறுவனத்தில் பணிபுரியும் பெரும்பாலானவர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான முழு சம்பளத்தையும் வழங்கவுள்ளதாக அந்நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
'ஊரடங்கின்போது ஊதியத்தைக் குறைக்கக் கூடாது என்ற அரசாங்கத்தின் விருப்பத்திற்கு ஏற்ப, ஏப்ரல் மாதத்திற்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்ட ஊதியக் குறைப்பு குறித்த முடிவை திரும்பப் பெற்றுள்ளோம்' என இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ரோனோஜோய் தத்தா மின்னஞ்சல் மூலமாக ஊழியர்களிடம் அறிவித்துள்ளார்.
'இருப்பினும், சில ஊழியர்கள் சம்பளக் குறைப்பு செய்து கொள்ளுமாறு தாமாகவே முன்வந்து தெரிவித்துள்ளனர். அதன்படி பிற அனைவருக்கும், ஏப்ரல் மாத சம்பளம் எவ்வித ஊதியக் குறைப்பும் இல்லாமல் வழங்கப்படும்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 19ஆம் தேதி அன்று, இண்டிகோ நிறுவனம், அதன் விமானிகள், கேபின் குழுவினர், உதவி துணைத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், பேண்ட் சி மற்றும் பேண்ட் டி ஊழியர்கள் ஆகியோரின் சம்பளத்தை ஐந்து முதல் 15 விழுக்காடு வரை குறைக்கவிருப்பதாக அறிவித்திருந்தது.
இந்த ஊதியக் குறைப்பு அறிவிப்பின்போது, விமானத் துறை ஆபத்தில் இருப்பதாகவும், அதனால் தனக்கு 25 விழுக்காடு ஊதியக் குறைப்பும், பிற மூத்த துணைத் தலைவர்களுக்கு 20 விழுக்காடு சம்பளக் குறைப்பும் செய்யவுள்ளதாக தத்தா அறிவித்திருந்தார். இவை அனைத்தும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருந்தன.
முன்னதாக கரோனா பெருந்தொற்று காரணமாக ஜூன் காலாண்டில் இந்தியாவின் விமானத் துறை 3 முதல் 3.6 பில்லியன் டாலர் இழப்பை சந்திக்கும் என்று விமான சேவை ஆலோசனை நிறுவனமான கேப்பா தெரிவித்திருந்தது. கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு தொடங்கியதிலிருந்து பயணிகள் விமானப் போக்குவரத்து சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பொருளாதார நடவடிக்கையை மீட்டெடுக்க மத்திய அரசு தீவிரம்