அமெரிக்காவில் ஏழுநாள் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு நாடு திரும்பினார். தலைநகர் டெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்தில் தரையிறங்கிய அவரை, பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் டெல்லி பாஜக எம்.பி.க்கள் வரவேற்றனர்.
பின்னர் அங்கு பாஜக தொண்டர்கள் இடையே உரையாற்றிய பிரதமர், "கடந்த ஐந்து ஆண்டுகள் இந்தியா மீது மற்ற நாடுகள் வைத்திருந்த மதிப்பும், ஆர்வமும் கணிசமாக கூடியுள்ளதை என் பயணத்தின் போது உணர்ந்தேன். அறுதிப் பலத்துடன் அரசாங்கத்தை அமைக்க உதவிய 130 கோடி இந்தியர்கள் தான் இதற்குக் காரணம்.
அமெரிக்க நாட்டின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற 'ஹவுடி மோடி' நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், குடியரசு, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்றனர். அத்துடன், அலைகடலென இந்தியா வம்சாவழியினரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க : ஹவுடி மோடி!: ட்ரம்ப்புடன் கரம்கோர்த்த மோடி...! - ஆர்ப்பரித்த மக்கள்
அமெரிக்காவில் நான் சந்தித்த உலகத் தலைவர்கள் இந்த நிகழ்ச்சி குறித்து தன்னிடம் கேட்டறிந்தனர். அமெரிக்காவுடன் இந்தியா கொண்டுள்ள இணக்கமான உறவை உலகம் உணரத் தொடங்கியுள்ளது. இதற்கு உலகம் முழுவதும் பரவியிருக்கும் இந்தியர்களே காரணம்" என்றார்.
ராணுவ வீரர்கள் துணிச்சலுக்குத் தலைவணங்குகிறேன்
இதனிடையே, 2016இல் பயங்கரவாதிகள் மீது இந்தியா மேற்கொண்ட யூரி சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்துப் பேசிய மோடி,"மூன்று வருடங்களுக்கு முன்பு, இதே 28ஆம் தேதி துணிச்சல் மிக்க நமது ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகள் மீது துல்லியத் தாக்குதல் (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) நடத்தினர். இது இந்தியாவின் ஆற்றலையும், பெருமையையும் உலகிற்கு உணர்த்தியது. ராணுவ வீரர்களின் துணிச்சலுக்கு நான் தலைவணங்குகிறேன்" என்றார்.
இதையும் படிங்க : 'முதலீடு செய்யவேண்டும் என்றால், இந்தியாவுக்கு வாருங்கள்' - பிரதமர் நரேந்திர மோடி