இது தொடர்பாக ரயில்வே துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "கரோனா வைரசுக்கு எதிரான போரில் முன்கள வீரர்களாகச் சேவையாற்றும் மருத்துவப் பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள் ஆகியோரைப் பாதுகாக்க ரயில்வே துறை அமைச்சகத்துடன் பல்வேறு மாநிலங்கள் ஒருங்கிணைந்து வேலைசெய்துவருகின்றன.
இந்தப் பொருள்களைத் தயாரிப்பதற்கான சவால்களை ரயில்வே தொழிற்சாலைகள் ஏற்றுக்கொண்டன. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தலா 1.5 லட்சம் பாதுகாப்பு உபகரணங்களைத் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆறு மாதங்களில் மேலும் உயரும்.
தரமான பாதுகாப்பு உபகரணங்களைத் தயாரிப்பதற்குத் தேவையான மூலப்பொருள்களைக் கொள்முதல் செய்வதற்கு வடக்கு ரயில்வேக்கு பரிந்துரைக்கப்பட்டது. மேலும், 22.5 லட்சம் பாதுகாப்பு உபகரணங்கள், 22.5 லட்சம் என்-95 முகக்கவசங்கள், 2.25 லட்சம் லிட்டர் கிருமிநாசினிகள் ஆகியவை தயார் நிலையில் இருக்க ஹெச்.எல்.எல். லைஃப் கேர் நிறுவனத்துக்கு வடக்கு ரயில்வே சார்பாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க 50 ரயில்வே மருத்துவமனைகள் கரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளன. 5 ஆயிரத்து 231 ரயில்வே பெட்டிகள் கரோனா நோயாளிகளைத் தனிமைப்படுத்திச் சிகிச்சையளிக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளன" என்றார்.