டெல்லி: அதிவேக எதிரி ட்ரோன்களை வீழ்த்தும் திறன்கொண்ட இஸ்ரேலிய ஆயுத அமைப்புகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இந்திய கடற்படை இறுதிசெய்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சுமாஷ் 2000 ஃபையர் கன்ட்ரோல் சிஸ்டம் (எதிரி ட்ரோன்களை அழிக்கும் ஆயுதம்) விநியோகம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய கடற்படை தகவல் தெரிவித்துள்ளது.
ஆனால், எத்தனை சுமாஷ் 2000 ஃபையர் கன்ட்ரோல் சிஸ்டம் வாங்கப்படும் என்பது குறித்த தகவல் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இஸ்ரேலிய நிறுவனமான ஸ்மார்ட் ஷூட்டரால் தயாரிக்கப்பட்ட இந்த ஆயுதங்களால் அதிவேக ஆளில்லா விமானங்களைக் கண்டுபிடித்து வீழ்த்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் கப்பற்படை தலைமைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, எங்கள் படையை வலுப்படுத்த ஆளில்லா அமைப்பை (எதிரி ட்ரோன்களை அழிக்கும் ஆயுதம், கண்காணிக்கும் ஆளில்லா விமானம்) வாங்க முயற்சிக்கிறோம் என்றார்.