தெற்கு கலிபோர்னியா அருகே சாந்தாகுரூஸ் தீவில் ஆழ்கடல் நீச்சல் நிகழ்ச்சி மூன்று நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்பதற்காக ஏற்பாட்டாளர்கள் 6 பேருடன் சுற்றுலாப் பயணிகள் 33 பேர் படகில் பயணம் மேற்கொண்டிருந்தனர். செப்., 2ஆம் தேதி அதிகாலையில் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவர்களின் படகு திடீரெனத் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இந்த விபத்தில் ஊழியர்கள் 5 பேர் கடலில் குதித்து உயிர் தப்பிய நிலையில், மீதமுள்ள 34 பேரும் இறந்து விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில், அமெரிக்காவில் குடியேறிய ஒரு இந்தியத் தம்பதி உயிரிழந்துள்ளனர் என்று நம்பப்படுகிறது. இவர்கள் நாக்பூரைச் சேர்ந்த புகழ்பெற்ற குழந்தை மருத்துவரான சதீஷ் தியோபுஜாரியின் மகளும், மருமகனும் ஆவர். மருத்துவர் தியோபுஜாரியின் நெருங்கிய குடும்ப நண்பர் கூறும்போது, “சதீஷ் தியோபுஜாரின் மகள் சஞ்சீரி தியோபுஜாரி, பல் மருமததுவராவார். அமெரிக்காவில் ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த நிர்மலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அதனையடுத்து இருவரும் அமெரிக்காவில் குடியேறினர்” என்று கூறினார். இச்சம்பவம் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.