ஆப்பிரிக்க நாடான சோமாலியா தலைநகர் மொகாதீசுவில் உள்ள நிறுவனத்திற்கு உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த 33 தொழிலாளர்கள், கடந்த 10 மாதங்களுக்கு முன் வேலைக்காக சென்றனர்.
முதல் இரண்டு மாதங்களுக்கு சம்பளத்தை சரியாகக் கொடுத்த அந்நிறுவனம், பின்னர் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளது. இது குறித்து தொழிலாளிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அனைவரையும் நிறுவனத்தினர் சிறைப்பிடித்து வைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர்களை நிறுவனத்தினர் உணவு, தண்ணீர் வழங்காமல் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து, இதுகுறித்து அங்கு பணியாற்றும் நபர் ஒருவர் அளித்த தகவலின் பேரில், இப்பிரச்னை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. தற்போது இது தொடர்பாக சோமாலிய அரசுடன் இந்தியத் தூதரக அலுவலர்கள் பேசி வருகின்றனர்.
இந்நிலையில், சோமாலியாவில் சிக்கித் தவிக்கும் 33 இந்தியர்களையும் பத்திரமாக மீட்கும் பணியில் இந்திய அரசு முழுவீச்சில் செயல்பட்டு வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் "சோமாலியாவின் மொகாதீசுவில் சிக்கியுள்ள 33 இந்தியர்களை மீட்கும் முயற்சியில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும், நைரோபியில் உள்ள தூதரக உயர் ஆணையர்களும் செயல்பட்டு வருகின்றனர். இது குறித்து நாங்கள் இந்தியாவில் உள்ள சோமாலியத் தூதரகத்துடன் தொடர்ந்து பேசி வருகிறோம். விரைவில் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என நம்புகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.