அமெரிக்கா, இந்தியா ஆகிய இருநாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உயர்மட்ட அளவிலான உரையாடல் இன்று நடைபெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தையில், இந்திய தரப்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றனர்.
அமெரிக்க அரசு சார்பில் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்புச் செயலர் மார்க் டி எஸ்பர் இருவர் கலந்துகொண்டனர்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நடந்துவரும் சீனாவின் படை விரிவாக்கம், கிழக்கு லடாக் தகராறு உள்ளிட்ட முக்கியமான பிராந்திய, உலகளாவிய சிக்கல்கள் குறித்து இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய பங்காளித்துவத்தை மேலும் அதிகமாக்குவதற்கு அடித்தள ஒப்பந்தங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளதாகப் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில், அமெரிக்காவுடன் இந்திய அரசு, அடிப்படை பரிமாற்றம், புவிசார் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் (பி.இ.சி.ஏ.) கையெழுத்திடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், அதன் மூலமாக அமெரிக்காவின் புவியியல் நுண்ணறிவுத் தகவல்கள், பாதுகாப்பு வரைபடங்கள், செயற்கைக்கோள் படங்கள் பற்றிய தகவல்களை இந்தியா பயன்படுத்த அந்நாட்டு அனுமதி அளிக்கும் என நம்பப்படுகிறது.