குடியுரிமை திருத்த மசோதா சட்டமானதைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில், மலேசியா பிரதமர் மகாதீர் முகமது அந்நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்ற உச்ச மாநாட்டில் கலந்துகொண்டார். அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேசிய மகாதீர் முகமது, "மதச்சார்பற்ற நாடாக விளங்கும் இந்தியா, நாட்டில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருப்பது கவலையளிப்பதாக உள்ளது" என்றார்.
இதற்கு பதிலளித்துள்ள வெளியுறவுத் துறை அமைச்சகம், "பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த அகதிகளுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் குடிமகன்களுக்கு இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. உண்மைகளைத் தெரிந்துகொள்ளாமல் உள்நாட்டு விவகாரங்களில் மற்றவர்கள் தலையிடக் கூடாது" எனத் தெரிவித்தது.
காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்புத் தகுதி நீக்கப்பட்டதிலிருந்தே மலேசியா, இந்தியா நாடுகளுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவிவருகிறது. காஷ்மீர் விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையில் மலேசியா பிரதமர் மகாதீர் முகமது எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆந்திர முதலமைச்சருக்கு அரசியல் கட்சித் தலைவர்களிடமிருந்து குவியும் வாழ்த்துகள்!