புதிய ரக போயிங்-777 விமானம் அடுத்த வாரம் இந்தியாவில் களமிறக்கப்பட உள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஜூன் 30, ஜூலை 30 ஆகிய தேதிகளில் இந்த விமானம் வரவிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக விமானம் வருவதில் தாமதம் நேர்ந்தது.
இந்நிலையில், அடுத்த வாரம் ஒரு விமானமும், இந்த வருட இறுதியில் மற்றொரு விமானமும் வந்தடையும் என போயிங் நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது. இதற்காக ஏர் இந்திய விமானப்படை, பாதுகாப்பு படை ஆகியவற்றைச் சேர்ந்த மூத்த அலுவலர்கள் கொண்ட குழு ஒன்று அமெரிக்கா சென்றுள்ளது.
விமானத்தின் சிறப்பம்சங்கள்:
இந்த வி.வி.ஐ.பி விமானம் பிரதமர், குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் ஆகியோர் பயணம் செய்யும் விமானமாகும். புதிதாக வரப்போகும் விமானம், பிரதமரின் பயணத்திற்கு பயன்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
முன்பிருந்த போயிங் ரக விமானம், முழு எரிபொருள் திறனுடன் 10 மணிநேரம் பயணம் செய்யவல்லது. ஆனால், இந்தப் புதிய ரக விமானம் 17 மணிநேரம் பயணம் செய்யும் திறன் கொண்டுள்ளது.
மேலும், பாதுகாப்புத் திறன் மேம்பாடுகளும் இந்தப் புதிய விமானத்தில் செய்யப்பட்டுள்ளன. ஏதேனும் ஏவுகணைகள் விமானத்தை தாக்கும்பட்சத்தில், அதனை முன்கூட்டியே அறிந்து, தடுத்து நிறுத்தும் திறனை, இந்தப் புதிய ரக விமானம் கொண்டுள்ளது.
இந்த வி.வி.ஐ.பி போயிங்-777 ஏர் இந்தியா விமானத்தை ஏர் இந்தியா நிறுவனம் இயக்காது எனவும், இந்திய விமானப்படை அலுவலர்களே இயக்குவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'சின்ன ரூட், அதிக லாபம்' - இந்திய ரயில்வேயின் புதுத் திட்டம்