லடாக் கிழக்குப் பகுதியில் 'லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல்' என்று அழைக்கப்படும் இந்திய-சீன எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் மே 5ஆம் தேதி முதல் இருதரப்பு ராணுவத்தினருக்கும் இடையே மோதல் நிலவிவருகிறது.
இந்நிலையில், மோதலின் மையப்புள்ளிகளுள் ஒன்றான கல்வான் பள்ளத்தாக்கில் திங்கள் இரவு இருதரப்பு ராணுவத்தினருக்கு இடையே வன்முறை வெடித்தது.
இதில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்களும், சீனாவைச் சேர்ந்த 40-க்கும் அதிகமான வீரர்களும் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
1975ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்திய-சீன எல்லைப் பிரச்னையில் உயிரிழப்பு நிகழ்வது இதுவே முதல்முறையாகும்.
இந்த பிரச்னையைத் தீர்க்க உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் சூழலில், இந்த வன்முறையானது அரங்கேறியுள்ளது.
இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், "கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் நிலவிவரும் போர்ப்பதற்றத்தைக் குறைப்பது குறித்து ராணுவ-தூதரக அளவில் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.
ஜூன் 6ஆம் தேதி மூத்த ராணுவ தளபதிகள் சந்தித்துப் பேசியபோது, மோதலைக் குறைப்பதற்கான செயல்முறையை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, களத்தில் உள்ள தளபதிகள் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த பிரச்னை விரைவில் சுமுகமான முடிவுக்கு வரும் என்று நாங்கள் எதிர்பார்த்து வந்த வேளையில், கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோலில் சீனா அத்துமீறலில் ஈடுபட்டதாலேயே அங்கு வன்முறை வெடித்தது.
இந்த மோதலில் இருதரப்பிலும் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. சீன தரப்பு விதிமீறலில் ஈடுபடாமல் இருந்திருந்தால் இந்தச் சம்பவம் நடந்திருக்காது" என்றார்.
லடாக்கில் போர் மேகம் சூழ்ந்துள்ளதை அடுத்து, டெல்லியில் அவசரக் கூட்டங்கள் நடந்துவருகின்றன. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரசாத், முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், மூன்று படைகளின் தளபதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே தொலைபேசி மூலம் உரையாடாலுக்கு ஏற்பாடுசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பது வரும் நாள்களில்தான் தெரியும்.
2017 டோக்லாம் பீடபூமியில் நடந்த மோதலை அடுத்து, மோடி-ஜி ஜின்பிங் இடையே வூஹான், மாமல்லபுரத்தில் முறைசாரா உச்சிமாநாடு நடந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்தியாவில் ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் சீனா!