வட மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக வெங்காய விளைச்சல் பாதிப்புக்குள்ளானதைத் தொடர்ந்து தற்போது வெங்காயத்தின் விலை கிடுகிடுவென பல மடங்கு உயர்ந்துள்ளது.
ஓரிரு வாரங்களுக்கு முன்னால் கிலோ 15 ரூபாய்க்கு விற்ற வெங்காயத்தின் விலை தற்போது கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. மழையால் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெங்காய மூட்டைகளும் வெள்ளத்தால் அழுகி போய்விட்டதால், தேசிய அளவில் வெங்காயத்தில் விலை உயர தொடங்கியிருக்கிறது.
இந்தியாவிலேயே மகாராஷ்டிர மாநிலம் நாசிக் பகுதியில்தான் அதிக அளவில் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுவரை இல்லாதளவு வெங்காயத்தின் விலை ஒரு குவிண்டாலுக்கு ஆயிரம் ரூபாய் அதிகரித்து நான்காயிரத்து 500 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதனால் தேசிய அளவில் வெங்காய பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது கிலோ 50 ரூபாய் விற்றுவரும் பெரிய வெங்காயம் மேலும் 10 ரூபாய் முதல் 15 ரூபாய்வரை அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 50 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது என கோயம்பேடு மொத்த சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து இளம் மங்கையரை பெற்றவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துவரும் நிலையில், தற்போது உயர்ந்துவரும் வெங்காயத்தின் விலை காரணமாக வெங்காயம் இல்லாமல் குழம்பு வைக்க வழி இருக்கிறதா என இல்லத்தரசிகள் யோசித்துவருகின்றனர்.