பஞ்சாப் மாநிலத்தில் சிறையிலிருந்த 20 மீனவர்கள் உள்பட 25 பாகிஸ்தான் கைதிகளை மத்திய அரசு விடுவித்துள்ளது. அவர்கள் அத்தாரி-வாகா எல்லையிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பினர்.
இது குறித்து காவல் துறை அலுவலர் அருண்பால் சிங் கூறுகையில், "தவறுதலாக இந்தியாவுக்குள் நுழைந்த குற்றத்திற்கான சிறைவாசத்தை இந்த மீனவர்கள் அனுபவித்து முடித்துள்ளனர். தற்போது, அனைவரும் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள்" எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய கராச்சியைச் சேர்ந்த மீனவர் முகமது, "நான் சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாகிஸ்தானுக்கு செல்கிறேன். மீதமுள்ள மீனவர்களை விரைவாகத் திருப்பி அனுப்புமாறு இரு அரசாங்கங்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
பாகிஸ்தான் கைதிகளை விடுவிக்கும் இந்த முடிவு, கரோனா தொற்றால் பாகிஸ்தானில் சிக்கிக்கொண்ட 221 இந்தியர்கள் எட்டு மாதங்களுக்கு பிறகு இந்தியா திரும்பிய மறுநாளில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.