பாரிஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'ரிப்போர்ட்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ்' (Reporters Without Borders) என்ற அமைப்பு லாப நோக்கமற்று செயல்படும் அமைப்பாகும். இந்த அமைப்பு ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை ஆவணப்படுத்தியும் அதற்கு எதிராக போராடியும் வருகிறது. ஊடகச்சுதந்திரம் உள்ள நாடுகளின் தரவரிசை அட்டவணையை இந்த அமைப்பு ஆண்டுதோறும் வெளியிடும். அதேபோல், இந்தாண்டுக்கான அட்டவணையை நேற்று (ஏப்ரல் 21) வெளியிட்டது.
ஊடகச்சுதந்திரம் உள்ள நாடுகளின் அட்டவணையில் 180 நாடுகள் இடம்பெற்றுள்ளன. அதில், இந்தியா இரண்டு இடம் பின்னுக்குச் சென்று 142ஆவது இடத்தில் உள்ளது. இந்த அட்டவணயைில் அண்டை நாடுகளான பாகிஸ்தான் 145ஆவது இடத்திலும் வங்கதேசம் 151ஆவது இடத்திலும் உள்ளன. இந்த அட்டவணையில் சீனா 177ஆவது இடத்திலும் வடகொரிய கடைசி இடமான 180ஆவது இடத்திலும் உள்ளன. ஊடகச் சுதந்திரம் உள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் நார்வே உள்ளது.
"2018ஆம் ஆண்டு ஆறு ஊடகவியலாளர்கள் இந்தியாவில் கொல்லப்ட்ட நிலையில், 2019ஆம் ஆண்டு யாரும் கொல்லப்படவில்லை என்பது ஊடக சுதந்திரம் இந்தியாவில் மேம்பட்டது போல் ஒரு தோற்றத்தை உருவாக்கலாம். ஆனால், காவல்துறையின் வன்முறைகள், உள்ளூர் அரசியல் பிரமுகர்களின் மிரட்டல்கள், குற்றக்கும்பல்களின் தாக்குதல்கள் போன்றவை ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்படுவது தொடர்கிறது" என அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.
மேலும், "இந்தியாவில் இந்துத்துவா கொள்கைகளை பின்பற்றுபவர்கள் ஆட்சியில் உள்ளதால், அவர்களுக்கு எதிரான கருத்துகளை பேசுபவர்கள், எழுதுபவர்கள் மீது சமூக வலைதளங்களில் வெறுப்பு பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. அதில், குறிப்பாக பெண் ஊடகவியலாளர்களே அதிகம் குறிவைக்கப்படுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஜனநாயகத்தை நசுக்கும் அரசு: காஷ்மீர் ஊடகவியலாளர் மீது உபா சட்டத்தின்கீழ் வழக்கு!