கோவிட்-19 தொற்று இந்தியாவில் மார்ச் மாதம் பரவத் தொடங்கியது. அப்போது இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 100க்கும் குறைவான கரோனா மருத்துவ பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. அதைத்தொடர்ந்து எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தற்போது ஒரு நாளில் ஒரு லட்சம் மருத்துவ பரிசோதனைகள்வரை மேற்கொள்ளப்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இரண்டு மாதங்களுக்கு முன் தினசரி 100 பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. தற்போது வெறும் 60 நாள்களில் மருத்துவ பரிசோதனைகள் ஆயிரம் மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சி நிறுவனங்கள், மருத்துவக் கல்லூரிகள், சோதனை ஆய்வகங்கள், விமான நிறுவனங்கள் ஆகியவற்றின் அர்ப்பணிப்பு நிறைந்த பணி காரணமாக மட்டுமே இது சாத்தியமாகியுள்ளது.
கோவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்ள ஜனவரி மாதம் புனேவிலுள்ள தேசிய கிருமியியல் நிறுவனம் மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது நாடு முழுவதும் 555 ஆய்வகங்கள் உள்ளன.
தொழில்நுட்பம் புதியது என்பதாலும் அதிக அளவில் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதாலும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டோம். சுகாதாரப் பணியாளர்கள் பல்வேறு புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
மருத்துவக் கருவிகள் சரியான நேரத்தில் ஆய்வகங்களுக்கு சென்று சேர்வதை உறுதி செய்ய அரசுடன் தனியார் விமானங்களும் இணைந்துகொண்டன. இதன் மூலம் கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 40 டன் மருத்துவ பொருள்களை 150 விமானங்கள் மூலம் நாடு முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது 1,18,447 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 3,583 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: 'குடிபெயர் தொழிலாளர்களுக்கு தானியம் மட்டுமல்ல, பணமும் தேவை'