உலக நாடுகளை மிரட்டும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் பல முன்னணி நாடுகளே திணறி வருகின்றன. இதுவரை உலகளவில் 75 லட்சத்து 83 ஆயிரத்து 833 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 23 ஆயிரத்து 81ஆக அதிகரித்துள்ளது. வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 38 லட்சத்து 35 ஆயிரத்து 104 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், உலகளவில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளில் ஏழாவது இடத்திலிருந்த இந்தியா ஒரே வாரத்தில் நான்காவது இடத்திற்குச் சென்றுள்ளது. தற்போது, நாட்டில் வைரஸ் வீரியம் அதிகளவில் உள்ளதால் தான், கரோனா எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்வதாக நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். சராசரியாக இரண்டு நாள்களுக்கு 10 ஆயிரம் பேர், இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள் என அமெரிக்க குழுவினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆனால், அதே சமயம் இந்தியாவின் மொத்த கரோனா பாதிப்புகளுடன் ஒப்பிடுகையில், நான்கு வாரங்களுக்கு முன்பு இருந்த இறப்பு விகிதம் 3.2 விழுக்காட்டிலிருந்து தற்போது 2.9 விழுக்காடாக குறைந்துள்ளது.
இந்தியாவில் உள்ள கரோனா பாதிப்புகளில் 69 விழுக்காடு மக்களுக்கு அறிகுறிகள் இல்லாமல் தான் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என ஐ.சி.எம்.ஆர் முன்பே கூறியிருந்தது.