கோவிட்-19 (கொரோனா) வைரஸ் என்ற நோய்த்தொற்று உலகை அச்சுறுத்திவரும் வேளையில், இதனைக் கூட்டாகச் சேர்ந்து எதிர்கொள்வது குறித்து திட்டம் தீட்ட சார்க் நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
இது தொடர்பாக அரசு வட்டாரங்களில் கேட்போது, "மற்ற பிராந்தியங்களுடன் ஒப்பிடுகையில் சார்க் நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாகவே உள்ளது. 150 என்பது மிகச் சிறிய எண்ணிக்கையே.
சில சார்க் நாடுகளுக்கு சீனாவிலிருந்து அதிகளவில் பயணிகள் வந்து சென்றுள்ளனர். வைரஸ் பாதிப்பை குறைத்து மதிப்பிடக் கூடாது. ஆதலால் அண்டை நாடுகளுக்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது.
கோவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள், நோயாளிகளைத் தனிமைப்படுத்துவது ஆகியவை குறித்து இந்திய குழுவினர் அண்டை நாடுகளுக்கு எடுத்துரைப்பர். மேலும், வைரஸ் பாதிப்பை உடனுக்குடன் கண்காணிக்க உதவும் செயலி ஒன்றையும் அந்நாடுகளுக்கு இந்தியா வழங்க உள்ளது.
கோவிட்-19 மட்டுமில்லாமல் மற்ற நோய்ப் பேரிடர்கள் குறித்து கூட்டாக ஆய்வுமேற்கொள்ளலாம் எனவும் இந்தியா முன்மொழிந்துள்ளது. மேலும், நிலைமையைச் சமாளிக்க மருத்துவர்கள், வல்லுநர்கள் அடங்கிய அதிவிரைவுப் படை ஒன்றை உருவாக்கி வருவதாகவும் பிரதமர் அறிவித்துள்ளார்.
மருந்து, மாத்திரைகள் வேண்டுமென பல நாடுகள் கோரிக்கை விடுத்துவருகின்றன. நாட்டில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதால் அதுகுறித்து அரசு பரீசிலித்துவருகிறது. முன்னதாக, சீனாவின் வூஹான் நகருக்கு நாங்கள் 15 டன் எடையுள்ள மருத்துவ உபகரணங்களை அனுப்பியிருந்தோம்" என்றனர்.
கருத்து வேறுபாடுகளை மறந்து இந்திய முன்வந்திருக்கும் வேளையில், இந்த விவகாரத்தையும் பாகிஸ்தான் அரசியலாக்கப் பார்ப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், "இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பாகிஸ்தான் அதன் சுகாதாரத் துறை அமைச்சரை அனுப்பியிருந்தது. அவர் துண்டு தாள் ஒன்றை வைத்துக்கொண்டு தயங்கித் தயங்கிப் பேசினார்.
மனிதாபிமானத்துடன் அணுக வேண்டிய பிரச்னையை பாகிஸ்தான் அரசியலாக்கப் பார்க்கிறது. ஆலோசனைக் கூட்டத்திற்கு ஒரு நாள் முன்புதான் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலிகூட இதில் கலந்துகொண்டார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தவிர சார்க் நாடுகளின் அத்தனை தலைவர்களும் கலந்துகொண்டனர்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : தலிபான்களை விடுவிக்க அதிபர் மறுப்பு!