அரசியலைப்புச் சட்டம் 370, 35ஏ பிரிவுகள் நீக்கம் செய்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்த மத்திய அரசு, 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருத்தம் செய்யப்பட்ட நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்டது.
உள்துறை அமைச்சகம் சார்பாக வெளியிடப்பட்ட இந்த வரைபடத்துக்கு நேபாள அரசு எதிர்ப்பு தெரிவித்தது. சர்ச்சைக்குரிய 'கலபானி' பகுதியை இந்தியா எல்லைக்குட்பட்ட உத்தரகண்ட் மாநிலம் புதோராகார்க் மாவட்டத்தின் ஒரு பகுதியாக அச்சிடப்பட்டிருந்ததே இதற்குக் காரணம்.
நேபாளத்தின் எதிர்ப்புக்கு அப்போது பதிலளித்த இந்தியா, நிலப்படவியல் ரீதியாக எந்த ஒரு விதி மீறலிலும் ஈடுபடவில்லை என்றும் கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட வரைபடங்களின் அடிப்படையில் இது துல்லியமாக்கி அச்சப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கைலாஷ்-மானசரோவர் யாத்திரை செல்லும் பக்தர்கள் பயண தூரத்தைச் சுருக்கும் வண்ணம் உத்தரகண்ட் மாநிலம் தார்சூலாவிலிருந்து லிப்புலேக் என்ற சீல எல்லைப் பகுதி வரை அமைக்கப்பட்டுள்ள புதிய சாலையை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த வாரம் திறந்துவைத்தார்.
இது இந்தியா-நேபாளம் இடையே மீண்டும் மோதலைப் பற்றவைத்துள்ளது.
நேபாள வெளியுறவுத் துறை அமைச்சகம் கடந்த சனிக்கிழமை வெளியிட்டிருந்த அறிக்கையில், "மகாகாளி நதிக்கு கிழக்கே உள்ள லிம்பியாதுரா, கலபானி, லிப்புலேக் ஆகிய பகுதிகள் 1816 சுகௌலி ஒப்பந்தப்படி நேபாள எல்லைக்குட்பட்டது. நேபாள எல்லைப் பகுதியில் ஊடுருவல் வேலைகளை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும்" எனக் காட்டமாக எதிர்ப்பை பதிவிட்டிருந்தது.
இதற்குப் பதிலளித்திருந்த இந்திய வெளியுறவுத் துறை, "உத்தரகண்ட் மாநிலம், பிதோராகார்க் மாவட்டத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள சாலை முழுவதும் இந்தியா எல்லைக்குட்பட்டே அமைக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று பிரச்னை முடிந்தவுடன் எல்லைப் பிரச்னை குறித்து இருநாட்டு வெளியுறவுத் துறை செயலர்களும் ஆலோசிப்பர்" எனக் கூறியுள்ளது.
இதையடுத்து, இந்த வாரம் நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் பிரதீப் கயாலி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசுகையில், இந்தியாவுடனான நாட்டின் மேற்கு எல்லைப் பகுதியில் உள்ள பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், எல்லைப் பிரச்சனையைத் தீர்க்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, கடந்த திங்கள்கிழமை நேபாளத்துக்கான இந்தியத் தூதரை அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆஜர்படுத்தியதாகத் தகவல் வெளியான நிலையில், "அது வெறும் சந்திப்பு தான்" என இந்தியத் தரப்பு கூறியுள்ளது.
இந்தியா-நேபாளத்துக்கு இடையேயான உறவில் சீனா தலையிடுகிறதா ? நேபாள நாட்டுடனான பிரச்சினைகளைத் தீர்த்து, இருதரப்பு உறவைச் சரிசெய்ய இந்தியா எம்முறையைக் கையாள வேண்டும்? நேபாளம் சொல்வது போல் இந்தியா எல்லையை மீறியுள்ளதா அல்லது அரசியல் ஆதாயத்துக்காகச் செய்யப்பட்டதா? உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஈடிவி பாரத் மூத்த பத்திரிகையாளர் ஸ்மிதா ஷர்மா முன்னாள் நேபாள இந்தியத் தூதர் ரன்ஜித் ரே, ப்ரூக்கிங் இந்திய உறுப்பினர் கான்ஸ்டன்டினோ சேவியர் ஆகியோருடன் கலந்துரையாடுகிறார்.
இந்த கலந்துரையாடலின் போது கான்ஸ்டன்டினோ சேவியர் பேசுகையில், இந்தியா-நேபாளத்துக்கு இடையேயான 98 சதவீத எல்லைப் பிரச்னைகள் ஏற்கனவே தீர்க்கப்பட்டுள்ள சூழலில், சர்ச்சைக்குரிய கலபானி பகுதி இருநாட்டுக்கு இடையே நீண்டகாலப் பிரச்னையாக நிலைகொள்ள வாய்ப்புள்ளதாக எச்சரிக்கிறார்.
முன்னாள் தூதர் ரே பேசுகையில், நேபாளத்துடனான பொருளாதார உறவைச் சீனா அரசியலாக்கப் பார்ப்பதாகவும், நேபாள அரசுடனான உறவை இந்தியா ஆழமாக்கிக் கொள்ள வேண்டும் என்றும், பிரச்னைகளை சுமுகமாக தீர்க்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ‘நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ரூ.20 லட்சம் கோடியில் புதிய திட்டம்’ - பிரதமர் மோடி அறிவிப்பு