மத்திய அரசு பலவிதமான தளர்வுகளை ஒவ்வொன்றாக அறிவித்துவருகிறது. அந்த வகையில், வரவிருக்கும் அன்லாக் 4.0இல் நாட்டின் பொருளாதாரத்தையும், வேலைவாய்ப்பையும் கருதி பல விதமான தளர்வுகள் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
என்னென்ன தளர்வுகள்?
உள்ளூர் ரயில் / மெட்ரோவை அனுமதிப்பது, சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர், ஆடிட்டோரியங்கள், சட்டப்பேரவை அரங்குகள் போன்றவை அனுமதிப்பதற்கான ஆலோசனையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. செப்டம்பர் மாதத்தில் உள்ளூர் ரயில் சேவை தொடங்கவும், சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர் தகுந்த இடைவேளியை பின்பற்றி திறக்கவும் அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல், ஆடிடோரியங்கள், அரங்குகள் ஆகியவற்றிற்கு தளர்வு வழங்குவது குறித்தும் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. குறைந்த அளவிலான ஆட்களை தெர்மல் ஸ்கிரீனிங், தகுந்த இடைவேளி ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அனுமதிக்க வாய்ப்புள்ளது.
இதுகுறித்து சுற்றுலாத் துறை அமைச்சர் பிரஹ்லாத் படேல் கூறுகையில், " 50 சதவீதத்துடன் விருந்து அரங்குகள் திறக்க அனுமதி கேட்டு, உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளோம். ஹோட்டல் உரிமையாளர்களும் லாக்டவுனில் நெருக்கடியை சந்தித்துள்ளனர். அரசாங்கம் மிக விரைவாக முடிவுகளை எடுக்கும் என நம்புகிறேன்" என்றார்.
அன்லாக் 4.0 தொடர்பான கூட்டம் நிலுவையில் இருப்பதால் விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறப்பது குறித்து எந்த விதமான பேச்சுவார்த்தையும் அரசுத் தரப்பில் நடத்தப்படவில்லை என தெரிகிறது. மேலும், பொழுதுபோக்கு பூங்காக்கள், மல்டி ஸ்கிரீன் தியேட்டர்கள் திறக்க வாய்ப்பே இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.