சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், உலகையே ஆட்டிப்படைத்துவருகிறது. உலகளவில் இதுவரை கரோனாவால் 76 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4.5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதுஒருபுறமிருக்க உலகப் பொருளாதாரம் வரலாறு காணாத அளவிற்குச் சரிவைச் சந்தித்து வருகிறது.
இந்நிலையில், தென் கிழக்கு ஆசிய நாடான லாவோஸின் பிரதமர் தோங்லோன் சிசோலிதுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஜூன் 12) தொலைப்பேசி மூலம் உரையாடினார். அப்போது, கரோனா பெருந்தொற்றால் பொருளாதாரம், சுகாதாரத் துறை சந்தித்து வரும் சவால்கள் குறித்து ஆலோசித்தனர். மேலும், கரோனா பெருந்தொற்றையடுத்து எதிர்வரும் சவால்களைச் சந்திக்க சர்வதேச ஒத்துழைப்பின் அவசியம் குறித்தும் இரு தலைவர்களும் உரையாடினர்.
கரோனா வைரசைக் கட்டுப்படுத்துவதில் லாவோஸ் சிறப்பாகச் செயல்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து, இந்தியா-லாவோஸ் இடையேயான வரலாற்று மற்றும் கலாசார தொடர்புகளைச் சுட்டிக்காட்டி பேசிய மோடி, வாட் ஃபோவில் உள்ள உலகப் பாரம்பரிய சின்னத்தை மீட்டெடுக்கும் முயற்சிக்கு மகிழ்ச்சி தெரிவித்தார். லாவோஸுக்கு இந்தியா அளித்துவரும் உதவிகளுக்கு அந்நாட்டுப் பிரதமர் தோங்லோன் சிசோலித் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
இதையும் படிங்க : இந்திய ராணுவ அகாதமியில் பயிற்சி: ராணுவத்தில் இணையும் 333 வீரர்கள்