உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பால் இதுவரை 210 நாடுகளைச் சேர்ந்த 24 லட்சத்து ஏழாயிரத்து 414 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 73 பேர் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு இன்று உறுதிசெய்துள்ளது.
சீனாவிலிருந்து பரவத்தொடங்கிய இந்தக் கொடிய வைரஸ் ஐரோப்பிய, மத்தியக் கிழக்கு நாடுகளில் தீவிரமாகி, கடந்த 26 நாள்களாக கஜகஸ்தானில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் பெருந்தொற்றால் 1,735 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 20 பேர் உயிரிழந்தனர் என அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்க கஜகஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. அச்சுறுத்திவரும் கரோனாவை எதிர்கொள்ள மருத்துவ ரீதியாக உதவ வேண்டுமென கஜகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோக்காயேவ் இந்தியா அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதனையடுத்து, ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உள்ளிட்ட தடுப்பு மருந்துகளையும், மருந்தை தயாரிப்பதற்கான மூலப் பொருள்களும் இந்திய அரசால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கஜகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோக்காயே தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியா வெளிநாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்ய தடைவிதித்திருந்த நிலையில், உலக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தப் பெருந்தொற்றை எதிர்த்து போராடும் உலக நாடுகளுக்கு இந்தியா செய்துவரும் உதவிக்கு தலை வணங்குகிறோம். கஜகஸ்தான் நாடுக்கு, கரோனா வைரஸை எதிர்கொள்ள உதவும் வகையில் மருத்துவ பொருட்களை அனுப்பிய இந்தியாவுக்கு நன்றி. இந்த நட்பு ஒற்றுமையின் உயர் அடையாளத்தை உருவாக்கியுள்ளது” என்று ட்வீட் செய்துள்ளார்.
இதற்கு பதிலளித்த இந்திய பிரதமர் மோடி தனது ட்விட்டரில், "உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. இந்தியாவும் கஜகஸ்தானும் உத்தி திறம் வாய்ந்த கூட்டாளிகள். இதுபோன்ற சவாலான காலங்களில் ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமையை நிரூபிப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பின் பிணைப்பை மேலும் வலுப்படுத்துகிறது" என கூறியிருந்தார்.
இதுவரை அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட 75க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருத்துவ உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சரக்கு கிடைக்காத விரக்தியில் சானிடைசரை குடித்த அக்கா-தம்பி மரணம்!