நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 97 ஆயிரத்து 570 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 லட்சத்து 59 ஆயிரத்து 985ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் தற்போது வரை ஒன்பது லட்சத்து 58 ஆயிரத்து 316 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 36 லட்சத்து 24 ஆயிரத்து 197 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நேற்று ஒரு நாள் மட்டும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில், சிகிச்சைப் பலனின்றி ஆயிரத்து 201 பேர் உயிரிழந்தனர். இதனால் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77 ஆயிரத்து 472ஆக அதிகரித்துள்ளது.
நோய்த்தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அங்கு இரண்டு லட்சத்து 61 ஆயிரத்து 298 பேர் தற்போது வரை சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை 28 ஆயிரத்து 252 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் ஆந்திரப் பிரதேசம் உள்ளது. அங்கு தற்போது வரை 97 ஆயிரத்து 338 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் தொற்றால் பாதிக்கப்பட்ட நான்காயிரத்து 702 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தற்போது 48 ஆயிரத்து 482 பேர் தொடர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் எட்டாயிரத்து 154 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் தற்போது வரை ஒரு லட்சத்து ஆயிரத்து 556 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை மாநிலத்தில் ஆறாயிரத்து 937 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 25 ஆயிரத்து 416 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அம்மாநிலத்தில் நான்காயிரத்து 666 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் நான்கில் மூன்று பங்கு மக்கள், பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.