இந்தியா - சீன பாதுகாப்புப் படையினருக்கு இடையே கடந்த மே மாதம் முதலே எல்லையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக ஜூன் மாதம் கல்வான் பள்ளதாக்குப் பகுதியில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து எல்லையில் நிலைமை மேலும் சிக்கலானது.
எல்லையில் தற்போது நிலவி வரும் பதற்றநிலையை சமாளிக்க இருநாட்டு ராணுவ உயர் அலுவலர்களும் பேச்சுவாரத்தையில் ஈடுட்டுள்ளனர். ஒரு புறம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டாலும், மறுபுறம் எல்லையில் தொடர்ந்து வீரர்கள் குவிக்கப்பட்டு வருகிறார்கள்.
குறிப்பாக, எல்லையிலுள்ள குருங் மலைத்தொடருக்கும் மாகர் மலைத்தொடருக்கும் இடையிலான ஸ்பாங்கூர் பள்ளத்தாக்கு அருகே, அதிக அளவில் வீரர்களை குவிக்கப்பட்டு வருகின்றனர். ராணுவத்தைத் தாண்டி சீன ரிசர்வ் படைகளான மிலிட்டியா படைகளையும் சீனா எல்லையில் குவித்து வருகிறது.
சீனா அதிக அளவில் வீரர்களை எல்லையில் குவித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய ராணுவமும் எல்லையில் தனது வீரர்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக ஸ்பாங்கூர் பள்ளத்தாக்கு அருகே இருக்கும் எல்லையில் இருநாட்டு வீரர்களும் மிக அருகில் துப்பாக்கியால் சுடக்கூடிய தூரத்தில் குவிக்கப்பட்டு வருகின்றனர். இது எல்லையில் இருக்கும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
முன்னதாக, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொள்ள ரஷ்யா சென்றுள்ள வெளிறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயை சந்தித்து இரண்டு மணி நேரம் வரை ஆலோசனை நடத்தினார்.
அப்போது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் நிலவி வரும் பிரச்னைகளை சுமூகமான முறையில் தீர்க்க, ஐந்து அம்சத் திட்டத்திற்கு இருநாடுகளும் ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அமித் ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!