லடாக்கில் உள்ள இந்திய-சீன எல்லைப் பகுதியில் (லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல்) இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே கடந்த ஒரு மாதமாக மோதல் நிலவிவருகிறது.
இதன் காரணமாக, இரு நாடுகளும் தத்தமது ராணுவத்தினரை அங்கு பெருந்திரளாகக் குவித்துள்ளதால் அங்கு போர் பதற்றம் நிலவிவருகிறது.
இந்தப் பிரச்னையை சமூகமாகத் தீர்ப்பது குறித்து தொடர்ச்சியாக நடந்து வரும் ராணுவ அளவிலான பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டமாக, இந்திய ராணுவ துணை தளபதி ஹரிந்தர் சிங், சீன ராணுவ துணை தளபதி லியூ லின் இன்று காலை 9 மணிக்கு மால்டோவில் நேரில் சந்தித்துப் பேச உள்ளனர். இவர்களுடன் உயர்மட்ட குழு, மொழிப் பெயர்ப்பாளர்களும் உடன் செல்கின்றனர்.
இந்த பேச்சுவார்த்தையின் போது, எல்லைப் பகுதிகளில் சீனா கட்டி எழுப்பியுள்ள நிரந்தர, தற்காலிக கட்டடங்களை நீக்குமாறும், அமைதியை காக்க ஒத்துழைக்குமாறும் இந்தியத் தரப்பு வலியுறுத்தவுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, கால்வான் பள்ளத்தாக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சீனப் படையினர் சில நூறு மீட்டர்கள் பின்வாங்கினர். இது நல்ல சமிக்ஞையாகப் பார்க்கப்பட்டது.
ராணுவ அளவிலான பேச்சுவார்த்தையில் எல்லைப் பிரச்னை தீர்ந்துவிடும் என இந்திய ராணுவ தலைமை தளபதி எம்எம் நரவானே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : அமெரிக்கா - தலிபான் தாக்குதலில் ஆப்கான் காவலர்கள் 10 பேர் உயிரிழப்பு