கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக திட்டமிடப்பட்ட வெளிநாட்டு பயணிகள் விமானம் இந்தியாவிற்குள் நுழைவதற்கு ஒரு வாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையானது மார்ச் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் ஆகியோரை தவிர 65 வயதை தாண்டிய முதியவர்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் படி, மாநில அரசுகள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதேபோல், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரயில்வே மற்றும் விமான போக்குவரத்துத்துறை அளித்த அனைத்து சலுகை பயணங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றியமையாதப் பணியாளர்களுக்கு விலக்கு அளித்து, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களுக்கு வீட்டிலிருந்தே பணிபுரிய உத்தரவு பிறப்பிக்குமாறும் மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் ஒரே இடத்தில் கூடுவதைத் தவிர்க்கும் நோக்கில் மத்திய அரசின் குரூப் பி, குரூப் சி பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.