சீக்கிய மதத்தை நிறுவியவரும் அதன் முதல் குருவுமான குருநானக்கின் பிறந்த தினத்தையொட்டி, இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் சீக்கிய யாத்ரீகர்கள் கா்தார்பூரில் உள்ள நான்கானா சாஹிப் குருத்வாராவுக்கு யாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்தப் பகுதி சுதந்திரத்துக்குப் பின்னர் பாகிஸ்தான் வசம் சென்றது. இதையடுத்து இந்த யாத்திரையை மேற்கொள்வதற்கு வசதி ஏற்படுத்தும் நோக்கில், பஞ்சாபின் குருதாஸ்பூா் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவிலிருந்து பாகிஸ்தானின் கா்தார்பூர் குருத்வாரா வரை சாலை வழித்தடம் அமைக்கத் திட்டமிடப்பட்டது.
இச்சாலை வழியாகச் செல்லும் யாத்ரீகர்கள் நுழைவு இசைவு (விசா) இல்லாமல் பாகிஸ்தானுக்குச் செல்லலாம். இதில், குருதாஸ்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை இந்தியா அமைத்துள்ளது. மறுபுறம் கா்தார்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை பாகிஸ்தானும் அமைத்துவருகின்றது.
குருநானக்கின் 550ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வருகிற நவம்பர் மாதம் இச்சாலை பயன்பாட்டுக்கு வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், முகநூலில், சாலைப் பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் நாட்டுக்கு அந்நிய செலாவணி வருமானம் கிடைக்கும் எனவும் பதிவிட்டிருந்தார்.
அதாவது இந்திய யாத்ரீகர்கள் கட்டணமாக சுமார் ரூ.1400 (20 அமெரிக்க டாலர்கள்) வரை செலுத்த வேண்டும். இதையடுத்து இணையதளப் பதிவுகள் தாமதம் அடைந்தன.
இந்தக் கட்டணத்தை கைவிட வேண்டும் என இந்திய தரப்பிலிருந்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுவருகிறது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராகவுள்ளோம், எனினும் பாகிஸ்தான் கட்டணத்தை கைவிட வேண்டும் எனவும் இந்திய தரப்பில் மீண்டும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
குருநானக் தேவ், தனது கடைசி 18 ஆண்டை கர்தார்பூரில்தான் கழித்தார். சீக்கியர்கள் இந்த இடத்தை புனிதமாகக் கருதுகின்றனர். கர்தார்பூர் புனிதத் தலத்துக்கு ஒவ்வொரு நாளும் ஐந்தாயிரம் யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.
இதையும் படிங்க: கர்தார்பூர் வழித்தட திறப்புவிழா: மன்மோகன் சிங்குக்கு பாக். அழைப்பு