நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான்-2 என்னும் விண்கலத்தை கடந்த ஜூலை 22ஆம் தேதி விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தியது.
இதையடுத்து, பூமியின் சுற்றுப்பாதையிலிருந்து படிப்படியாக விலகிய சந்திரயான் 2, உந்துவிசை மூலம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி நிலவின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மொத்தம் ஐந்து கட்டங்களாக விண்கலத்தின் சுற்றுப்பத்தை வெற்றிகரமாக மாறியமைக்கப்பட்டு, செப்டம்பர் 2ஆம் தேதி பிரக்யான் ஆய்வூர்தியுடன் விக்ரம் லேண்டர் விண்கலத்திலிருந்து பிரிக்கப்பட்டது.
இதனிடையே, தனியாகப் பிரிந்த விக்ரம் லேண்டரை நிலைவின் தென்துருவத்தில் தரையிறக்க ஆயத்தமாகிவரும் நிலையில், சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்றுப்பாதையை இஸ்ரோ இன்று இரண்டாவது முறையாகக் குறைத்தது.
இதுகுறித்து ட்விட்டரில் இஸ்ரோ தெரிவித்துள்ளதாவது: சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்றுப்பாதை இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3:42 மணிக்கு இரண்டாவது முறையாக வெற்றிகரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, விக்ரம் லேண்டரின் சுற்றுப்பாதையும் இரண்டாவது முறையாகக் குறைக்கப்பட்டு, வரும் 7ஆம் தேதி விக்ரம் லேண்டர் நிலவில் மெதுவாகத் தரையிறங்கும். அது தரையிறங்கிய நான்கு மணி நேரத்தில் பிரக்யான் ஆய்வூர்தி நிலவில் ஊர்ந்து சென்று ஆய்வினை மேற்கொள்ளும்.