அகில இந்திய தலைமைத் தேர்தல் அலுவலர்களின் 80ஆவது மாநாடு குஜராத் மாநிலம் கேவாடியா கிராமத்தில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
அப்போது, சில நீதிமன்ற தீர்ப்புகள் எல்லை மீறுவதுபோல் அமைந்துள்ளதாகவும் அரசியலமைப்புக்கு ஏற்ப தங்களுக்கு வகுக்கப்பட்ட எல்லைக்குள் சட்டத் துறை, நிர்வாகத் துறை, நீதித் துறை ஆகியவை செயல்பட வேண்டும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அறிவுறுத்தியிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய ஓம் பிர்லா, ஜனநாயகத்தில் நிறுவனங்களுக்கிடையே கருத்து வேறுபாடு இருக்கலாம் எனத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நாடாளுமன்றம், சட்டப்பேரவை ஆகியவை செயல்பட வேண்டும். அதற்கான அடிப்படையை அரசியலமைப்பு வகுத்துள்ளது.
அரசியலமைப்பின் விழுமியங்களை நிலைநாட்டும் அதேவேளையில் பொதுமக்களின் நலனுக்காகச் செயல்பட வேண்டும். ஜனநாயகத்தில் நிறுவனங்களுக்கிடையே கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், வழிமுறைகளை மேம்படுத்தினால் மட்டுமே பிரச்சினைக்கான தீர்வுகளைக் கண்டறிய முடியும்.
சட்டத் துறை, நிர்வாகத் துறை, நீதித் துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மக்கள் நலனுக்காகவே இவை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதற்காக, இந்நிறுவனங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.