பட்டியலின மாணவர்களுக்கென்று பிரத்யேகமாக அம்பேத்கர் நவோதயா பள்ளிகள் அமைக்கப்படுமா என்றும், ஆம் எனில் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்றும் மக்களவையில் விழுப்புரம் தொகுதி உறுப்பினர் ரவிக்குமார் கேள்வி எழுப்பினார்.
இதற்கு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ளர். அதில், ”பட்டியலின மக்கள் அதிகளவில் இருக்கும் மாவட்டங்களில் ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் பட்டியலின மாணவர்களுக்கென்று உண்டு உறைவிடப் பள்ளிகளை திறப்பதற்காக 'அம்பேத்கர் நவோதயா வித்யாலயா' என்ற பெயரில் ஒரு திட்டத்தை சமூகநீதி அமைச்சகம் வகுத்துள்ளதாகவும்.
இந்தப் புதிய திட்டம் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த திறமைவாய்ந்த மாணவர்களை ஊக்குவிப்பதற்கென்று உருவாக்கப்படுகிறது. அவர்களுக்கு மிகச்சிறந்த வாய்ப்புகளையும் கல்விச் சூழலையும் வழங்கி அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், பிற மாணவர்களோடு அவர்கள் போட்டியிடுவதற்கும், மிகச்சிறந்த தொழிற் கல்வி வாய்ப்புகளை அவர்கள் பெறுவதற்கும், அதன்மூலம் நல்ல வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கும் உதவக்கூடிய நோக்கில் இது உருவாக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அம்பேத்கர் நவோதயா பள்ளி தொடங்கப்படுமெனில் முதல் ஆண்டிலேயே விழுப்புரத்தில் அதைத் தொடங்க வேண்டும் என்று ரவிக்குமார் கடந்த ஜனவரியில் மத்திய சமூகநீதித் துறை அமைச்சரிடம் மனு அளித்திருந்தார். அவர் அளித்த கடிதத்தில், தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் 30% மக்கள் பட்டியலினத்தவர்களாக உள்ளதால், விழுப்புரத்தில் அம்பேத்கர் நவோதயா பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: இந்தியாவில் நிலப்பத்திரங்கள் எந்த அளவிற்குக் கணினிமயமாக்கப்பட்டுள்ளது? - வைகோ கேள்வி