சர்வதேச அளவில் ஏற்படும் தொற்று நோய்கள், அதைத் தடுக்கும் வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து உலக நாடுகளுக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கிவரும் உலக சுகாதார அமைப்பு 34 உறுப்பு நாடுகளைக் கொண்டு செயல்பட்டுவருகிறது.
ஜெனிவாவில் நடைபெற்ற இந்த அமைப்பின் 73ஆவது வருடாந்திர பேரவைக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உலக சுகாதார அமைப்பின் 2020-21ஆம் ஆண்டுகளுக்கான செயற்குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவர், நேற்று செயற்குழுத் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதையடுத்து இவரைப் பாராட்டி இந்திய மருத்துவச் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், "உலக சுகாதார அமைப்பின் செயற்குழுத் தலைவராக இந்திய மருத்துவச் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் பொறுப்பேற்றுள்ளது பெருமைக்குரிய ஒன்று.
உலக நாடுகளை அச்சுறுத்திவரும் இந்தக் கரோனா பெருந்தொற்று காலத்தில் நீங்கள் பொறுப்பேற்றிருப்பது கோவிட்-19 மீட்டெடுப்பு நடவடிக்கைகளில் இந்தியாவின் பொறுப்பினை மேலும் அதிகரித்துள்ளது.
கரோனா தீநுண்மி குறித்த ஆய்வில் உலக சுகாதார அமைப்பின் பங்கினையும் நாம் இந்த இடத்தில் கவனத்தில்கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தது.
"இந்தியாவில் போலியோ நோய்த்தடுப்புத் திட்டம், புகையிலை, பல நோய்களுக்கு எதிரான போராட்டத்தில் முன்னோடியாகச் செயல்பட்ட ஹர்ஷ் வர்தன் தற்போது உலகம் முழுவதற்கான மருத்துவத் தேவைகளைக் கவனத்தில்கொண்டு செயல்படுவார்" என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் பூனம் கேத்ராபால் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: உலக சுகாதார அமைப்பின் செயற்குழு தலைவராகப் பொறுப்பேற்றார் ஹர்ஷ் வர்தன்!