கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி தேர்தல் பரப்புரை செய்வதற்காக பிரதமர் மோடி ஒடிசா மாநிலம் வந்தார். அப்போது தேர்தல் பார்வையாளராக அங்கு பணியிலிருந்த கர்நாடக ஐஏஎஸ் அதிகாரி முகமது மோஷின் தேர்தல் கால விதிகளின்படி மோடி பயணம் செய்த ஹெலிகாப்டரை சோதனையிட்டார். இந்நடவடிக்கையை மேற்கொண்ட அன்றே தேர்தல் ஆணையத்தால் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டார் மோஷின்.
இந்த பணியிடைநீக்கம் குறித்து கேட் என்ற தீர்ப்பாயம் விசாரணை நடத்தித் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டது. தீர்ப்பாயத்தின் தலையீட்டுக்குப் பின் நேற்று பணியிடைநீக்க உத்தரவைத் தேர்தல் ஆணையம் திரும்பப்பெற்றது.
இருப்பினும், முகமது மோஷின்மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள கர்நாடக மாநில அரசுக்குத் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முகமது மோஷின், 'தேர்தல் நேரத்தில் தேர்தல் பார்வையாளர் மேற்கொள்ளும் வழக்கமான கடமையைத்தான் நான் மேற்கொண்டேன், ஆனால் திடீரென்று அன்றிரவு 11.30 மணிக்கு என்னை பணியிடை நீக்கம் செய்துவிட்டனர். பணியிடை நீக்கம் செய்யப்பட்டவுடன் என் மீதான குற்றச்சாட்டு குறித்த அறிக்கையைத் தேர்தல் ஆணையத்திடம் கேட்டேன். ஆனால் இன்னும் அதை அனுப்பவில்லை. வழக்கமான கடமையைச் செய்தற்காக இவ்வழக்கில் இவ்வாறு அலைக்கழிக்கப்படுகிறேன். சட்டப்படி இப்பிரச்னையை எதிர்கொள்ளத் தயாராக உள்ளளேன்' என முகமது மோஷினி தெரிவித்துள்ளார்.