ஜம்மு-காஷ்மீரில் சிறப்புத் தகுதி ரத்து செய்யப்பட்டு 45 நாட்கள் கடந்தும் அம்மாநிலத்தின் மூன்று முன்னாள் முதலமைச்சர்களான ஒமர் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் தொடர்ந்து வீட்டுக்காவலில் இருந்துவருகின்றனர்.
இதனைக் கண்டிக்கும்விதமாக மெகபூபா முப்தியின் மகள் இல்டிஜா முப்தி கூறுகையில், ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு கருதி அரசியல் தலைவர்கள் உள்பட இன்னும் பல அப்பாவி காஷ்மீர் மக்களை மத்திய அரசு வீட்டுக்காவலில் வைத்துள்ளது. ஆகையால் அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
காஷ்மீரில் நடைபெறும் போராட்டங்களில் சிலர் கல்வீசும் செயலில் ஈடுபடுவதுண்டு எனக் குறிப்பிட்ட அவர், அதனால் காஷ்மீரியர்கள் அனைவரையும் வன்முறைக்காரர்கள் என்று கூறி வீட்டுக்காவலில் வைத்திருப்பது எந்தவிதத்தில் நியாயமாகும்? என ஆவேசமாகக் கேள்வியெழுப்பினார்.
ஹரியான மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக அதிகளவில் பாலியல் வன்முறைகள் நடப்பதுண்டு அதனால் அம்மாநிலத்தில் இருக்கும் அனைத்து ஆண்களையும் வன்முறைக்காரர்கள் என்று கூறி கைது செய்ய முடியுமா? என்று கேள்வியெழுப்பி அவர், இது குறித்து மத்திய அரசை தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.