கரோனா ஊரடங்கு உத்தரவினால் பொதுமக்கள் கூடுவதைத் தவிர்க்கும் விதமாக மாநிலம் முழுவதும் மதுபானக் கடைகள் திறப்பதற்கு முன்னதாக தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக, பல்வேறு பகுதிகளில் சிலர் தங்கள் பகுதிகளிலேயே சாராயம் காய்ச்சத் தொடங்கினர். இதனைத் தடுக்கும் வகையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்.
அந்தவகையில் நேற்று, நல்லான்பிள்ளை பெற்றாள் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பாக்கம் மலை பகுதியில் சிலர் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், உதவி ஆய்வாளர் தலைமையிலான காவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட கேன்களில் சாரய ஊறல்கள் இருப்பது கண்டறியப்பட்டு அவை அழிக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல் துறையினர் குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, புதுச்சேரி-தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் மதுபானக் கடத்தல்கள் அதிகரித்துவருவதால், புதுச்சேரி காவல் துறையினர் பலத்த சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் அரிசி எடுத்துவருவதாகக் கூறிய இரண்டு இளைஞர்களை காவல் துறையினர் சந்தேகமடைந்து விசாரித்ததில், அரிசிக்குள் மறைத்து 37 மதுபாட்டில்களை கடத்திவந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, புதுச்சேரியில் மதுபானக் கடைகள் திறக்கப்படாததால், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியிலிருந்து மதுபாட்டில் வாங்கிவந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: மதுக்கடைகள் திறப்பு ரத்து- முதலமைச்சர் நாராயணசாமி