கரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்றுவருகிறது. இந்த ஆன்லைன் வகுப்பின்போது இணையதள சேவை கிராமப்புறங்களில் போதுமான அளவிற்கு கிடைக்காததால் மாணவர்கள் பெறும் சிரமத்தை சந்தித்துவருகின்றனர்.
இதற்கு தீர்வுகாணும் வகையில், மும்பை ஐஐடியில் பட்டம் பெற்ற இரண்டு இளைஞர்கள் இணைந்து 2ஜி வேகத்தில் இயங்கக்கூடிய வைஸ் ஆப் என்ற செயலியை உருவாக்கியுள்ளனர்.
இந்த செயலி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இணைய சிக்கல்களைக் குறைக்க உதவுகிறது மற்றும் மெய்நிகர் கற்பித்தல் மூலம் உண்மையான வகுப்பறைபோல் தோற்றமளிக்கிறது. 'வைஸ் ஆப்' என்ற பயன்பாடு 2 ஜி நெட்வொர்க் சேவையில் குறைந்த வேக இணையத்தில் இயங்கும் வசதியுடன் பயன்படுத்த எளிதானதாக அமைந்துள்ளது.
இதுதொடர்பாக, ஈடிவி பாரத்திடம் பேசிய முபீன் மசூத், இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் இணையம் மெதுவாக இருக்கும் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர், அந்த சூழலில் வசிக்கும் மாணவர்கள் ஆன்லைனில் படிப்பது கடினம் என்றும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் "வைஸ் ஆப்" பயனுள்ளதாகவும் உதவியாகவும் இருக்கும் என்றும் கூறினார்.
"இது ஆசிரியர்களுக்கு பணிகளை அனுப்பவும் பெறவும், கலந்துரையாடல்களை எளிதாக்கவும், பாடங்களை பகிரவும், வருகை அறிக்கைகளைப் பெறவும் உதவுகிறது, இவை அனைத்தும் ஒரே ஆப்பில் உள்ளன," என்று அவர் மேலும் கூறினார்.
எந்தவொரு பள்ளி, நிறுவனமோ அல்லது தனிநபரோ பிளே ஸ்டோரிலிருந்து இந்த வைஸ் ஆப்பை பதிவிறக்கம் செய்து எந்த இடையூறும் இல்லாமல் பயன்படுத்தத் தொடங்கலாம். அறிவைப் பெறுவதில் மாணவர்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாத வகையில் பயன்பாட்டிற்கு இடையே விளம்பரம் வராதவாறும் , பயன்பாடு இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
கடந்த சில ஆண்டுகளில், தனது சகாவான முபீன் மசூத்துடன் கடுமையாக உழைத்ததன் பலனாக இந்த வைஸ் ஆப்பை உருவாக்கியுள்ளதாகவும், இதற்காக தனது சொந்த பணத்தை செலவு செய்துள்ளதாகவும் பிலால் கூறினார்.
2ஜி இணைய வேகத்தைப் பயன்படுத்தி ஆன்லைன் வகுப்புகளை எடுக்க மாணவர்களுக்கு உதவும் மொபைல் பயன்பாட்டை உருவாக்கியதற்காக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் இருவரையும் பாராட்டியுள்ளார்.
அதிவேக 4ஜி இணைய சேவை ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஒரு வருடத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, மேலும் மாணவர்கள் 2ஜி இணையத்தில் ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.