ஒரு காலத்தில் மேற்கு வங்கத்தின் அலிபுர்துவார் மாவட்டத்தில் உள்ள அந்த கட்டடத்தின் மூலை முடுக்கெல்லாம் டோலக் இசை ஒலித்துக் கொண்டிருக்கும். அது மறைந்த டோலக் இசைக்கலைஞர் பலராம் ஹஜ்ராவின் இல்லம். அவர் உயிரோடு இருந்தபோது, அவரது இல்லமான ‘குருகுல்’ எங்கும் இசை நிரம்பியிருக்கும்.
பலராம் ஹஜ்ராவிடம் ஆசி பெறுவதற்காகவே பல மைல்கள் கடந்து மாணவர்கள் இங்கு வருவதுண்டு. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூட இவரது இசையை விரும்பி ரசிக்கக் கூடியவர். அலிபுர்துவார் வருகையின்போது ஹஜ்ராவின் இசையை மம்தா புகழ்ந்து பேசியிருக்கிறார்.
ஹஜ்ராவின் இசையைக் கேட்டவர்கள் அவரை மாயாஜாலக்காரர் என்கின்றனர். தனது டோலக் இசையால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் மனதில் இடம்பிடித்த ஹஜ்ரா, பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார். மாநில அரசின் உயரிய விருதான பங்கரத்னா விருதும் அதில் ஒன்று.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஹஜ்ரா, 2017ஆம் ஆண்டு உயிரிழந்தார். இத்தனை புகழுக்குச் சொந்தக்காரரான ஹஜ்ரா மறைந்த பின்பு, அவர் குடும்பம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அவரது மனைவியும், மாற்றுத் திறனாளி குழந்தையும் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இப்போது அந்த வீட்டில் டோலக் இசை ஒலிப்பதில்லை. குருகுல் இப்போது மளிகை கடையாக மாறிவிட்டது. பொருளாதார நெருக்கடி காரணமாக ஹஜ்ராவின் மனைவி மளிகை கடை நடத்தி வருகிறார்.
ஹஜ்ரா மறைந்த பின்பு அரசாங்க தரப்பில் இருந்து எந்த ஒரு உதவியும் செய்யப்படவில்லை. தற்போது அந்த குடும்பத்துக்கு டோலக் இசையுடன் எந்த தொடர்பும் இல்லை.