குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டமும் குழப்பமும் நீடித்துவரும் நிலையில் இந்தச் சட்டம் இந்திய சிறுபான்மையினரை பாதிக்காது என மத்திய அரசு தொடர்ச்சியாகத் தெரிவித்துவருகிறது.
நேற்று மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் வதந்தி பரப்புவதாகவும் இந்தச் சட்டம் சிறுபான்மையினருக்குப் பாதிப்பில்லை எனவும் தெரிவித்தார்.
அமித் ஷாவின் இந்தப் பேச்சுக்கு பதிலடி தரும்விதத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கிடுக்குப்பிடி கேள்வி ஒன்றை எழப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'குடியுரிமை திருத்தச் சட்டம் எந்த சிறுபான்மையினரையும் பாதிக்காது என அமித்ஷா கூறுகிறார்' என்றார்.
அப்படி என்றால் யாரை இந்தச் சட்டம் பாதிக்கும், யாரையும் பாதிக்காது என்பதற்குப் புதிதாகச் சட்டத்தை ஏன் திருத்த வேண்டும் எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், எந்தவொரு சிறுபான்மையினருக்கும் தீங்கு இல்லை என்றால் இந்தச் சட்டத்தில் சிறுபான்மை சமூகத்தினரை விலக்கியதற்கு என்ன காரணம் எனவும் வினவியுள்ளார்.
இதையும் படிங்க: அரசியல்வாதிகள் வந்தால் மட்டுமே இணைப்புக் கிடைக்கும் இலவச வைஃபை!