தேசியவாத காங்கிரஸ் நிறுவனர் சரத் பவாரின் மருமகனும், மகாராஷ்டிரா மாநிலத்தின் கார்ஜட் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ரோஹித் ராஜேந்திர பவார் முகநூலில் பாஜகவின் தற்போதைய நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், 'மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட பல தலைவர்களால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி மகாராஷ்டிரா. அப்படிப்பட்ட ஒரு தலைவர் தான் பால சாகேப் (பால் தாக்கரே). நான் அவரை மதிக்க பல காரணங்கள் உண்டு.
அதில் முக்கியக் காரணம் தேசிய அரசியலில் அவரின் வளர்ச்சி. தேர்தலுக்கு முன்னர் அதிகாரத்தை பங்கிட்டுக் கொள்ளலாம் என சிவசேனாவுக்கு பாரதிய ஜனதா வாக்குறுதி அளித்தது. ஆனால், தற்போது அந்த வார்த்தைக்கு எதிராக நடக்கிறது. ஒரு கேள்வி எழுகிறது. பால சாகேப், உயிருடன் இருந்திருந்தால் அவர்கள் இவ்வாறு தைரியத்தில் தொடர்வார்களா?' என ரோஹித் கூறியுள்ளார்.
மற்றொரு பதிவில், ' கிராமம், நகரங்களில் வசிக்கும் மக்கள் பல பிரச்னைகளில் சிக்கித் தவிக்கின்றனர். சாதாரண மனிதர்களுக்கு அரசின் உதவி தேவைப்படுகிறது. அந்த மக்கள் எதிர் தரப்பை (காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்) தேர்வு செய்துள்ளனர். அந்த மக்களுக்காக உழைக்க நாங்களும் உறுதியாக உள்ளோம். ஆனால், பாரதிய ஜனதாவும், சிவசேனாவும் ஜனநாயகத்தை அவமதிக்கின்றன.' என்றும் கூறியிருந்தார்.
288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா 105 தொகுதிகளிலும், சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றிப் பெற்றுள்ளன. கூட்டணியில் இருக்கும் அவர்களுக்குள் ஒருமித்த கருத்து ஏற்படாததால் புதிய அரசு அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி?