இடுக்கி (கேரளா): நிலச்சரிவில் தொலைந்த இரண்டு வயதான தனுஷ்காவின் உடலை அவரது செல்ல நாய் கூவி கண்டறிந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பெட்டிமுடி குடியிருப்பு பகுதியில் ஆகஸ்ட் 7ஆம் தேதி இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 80 பேர் மண்ணில் புதைந்தனர். 8 நாட்களாக நடைபெற்று வரும் மீட்புப் பணியில் இதுவரை 56 பேருடைய உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், 14 பேர் மாயமாகியிருப்பதாக கூறப்படுகிறது. இச்சூழலில் தொழிலாளியின் வீட்டில் வளர்ந்த நாயின் உதவியுடன் உயிரிழந்த சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தனுஷ்கா என்ற இரண்டு வயது சிறுமியின் வீட்டில் வளர்ந்த கூவி என்ற வளர்ப்பு நாய் கெமெட் பாலம் அருகே சுற்றிவந்துள்ளது.
அதை கவனித்துக்கொண்டிருந்த மீட்புப் படையினர் நாயின் அருகே சென்று பார்த்தபோது, தனுஷ்காவின் உடல் அங்கிருந்த மரக்கட்டையின் நடுவே சிக்கிக்கொண்டிருந்தை பார்த்தனர். அதையடுத்து சிறுமியின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். சிறுமியின் உடலை தூக்கிக்கொண்டு வரும்போது, கூவி மெல்லிய குரலில் அழுததாகவும் சம்பவ இடத்தில் இருந்த இடுக்கி எம்பி குரியகோஸ் தெரிவித்துள்ளார்.
தனுஷ்காவின் தந்தை பிரதீஷ் குமாரின் சடலம் கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது தாயார் கஸ்தூரி மற்றும் சகோதரி பிரியதர்ஷினி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. குழந்தையின் பாட்டி கருப்பாய் மட்டுமே குடும்பத்தில் உயிருடன் பிழைத்திருக்கிறார்.