கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் ஏராளமான தொழில்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அதில் வருடத்திற்கு ரூ.4 ஆயிரத்து 500 கோடி வரை வியாபாரம் செய்யப்படும் ஐஸ் க்ரீம் தொழில், 40 சதவிகிதம் வரை இழப்பை சந்தித்துள்ளது.
பாலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் பொருள்களின் பிரபலமான விற்பனை தொழில் நிறுவனமான அமுல் ஐஸ்க்ரீம், இந்த வருடத்திம் முதல் காலாண்டில் 50 சதவிகிதம் வரை இழப்பை சந்தித்துள்ளது.
இதுகுறித்து குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ்.சோதி பேசுகையில், ''கரோனா வைரசால் ஐஸ் க்ரீம் தொழில் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. முக்கிய அமுல் ஐஸ் க்ரீம் நிறுவனத்திற்கு 50 சதவிகிதம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற ஐஸ் க்ரீம் நிறுவனங்கள் 70 முதல் 80 சதவிகிதம் வரை இழப்பை சந்தித்துள்ளன.
மார்ச் மாதத்தில் மட்டும் ஐஸ் க்ரீம் விற்பனை கிட்டத்தட்ட 95 சதவிகிதம் குறைந்தது. ஏப்ரலில் 55 சதவிகிதமாகவும், மே மாதத்தில் 70 சதவிகிதமாகவும் விற்பனைகள் பாதிக்கப்பட்டன. ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளுக்கு பிறகு ஐஸ் க்ரீம் விற்பனையில் சில ஏற்றங்கள் இருந்தாலும் ஹோட்டல், உணவகங்கள், கேண்டீன் ஆகியவை முழுமையாக திறக்கப்படாததால் விற்பனை குறைந்தே உள்ளன.
திருமணம் உள்ளிட்ட சடங்குகளிலும் இப்போது ஐஸ் க்ரீம் விற்பனை செய்ய முடியாததால், ஜூன் மாதத்திலும் 30 சதவிகிதத்திற்கு மேல் விற்பனை இருக்காது.
ஒவ்வொரு வருடத்திலும் மார்ச் முதல் ஜூன் வரை கோடைக் காலம் என்பதால், 60 சதவிகித ஐஸ் க்ரீம் விற்பனைகள் இந்த மாதங்களில் தான் நடக்கும். ஆனால் கரோனா வைரஸ் பாதிப்பால் அமல்படுத்தப்பட்ட ஊரங்கு காரணமாக விற்பனை மிகவும் மந்தமாகியுள்ளது'' என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோவிட் 19 காலத்தில் காப்பீட்டின் தேவை - நிபுணரின் சிறப்புக் கட்டுரை