சீனா உள்ளிட்ட நாடுகளில் கொவிட்-19 (கொரோனா வைரஸ்) என்ற தொற்றுநோய் வேகமாகப் பரவிவருகிறது. இந்த நோய் காரணமாக இதுவரை சீனாவில் மட்டும் இரண்டு ஆயிரத்து 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பாதிப்பின் மையப்புள்ளியான வூஹான் நகரிலேயே தான் பெரும்பாலான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.
இந்தச் சூழலில், வூஹான் நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கவும், வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்லவும் விமானப்படை விமானத்தை அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விமானம் நாளை (பிப்ரவரி 26) வூஹான் புறப்பட்டுச் செல்லும் என்றும், நாளை மறுநாள் நாடு திரும்பும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வூஹான் செல்லும் விமானப் படை விமானம் பிப்ரவரி 26ஆம் தேதி புறப்பட்டு, அங்குள்ள இந்தியர்களை மீட்டு பிப்ரவரி 27ஆம் தேதி நாடு திரும்பும்" எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, வூஹான் நகருக்கு சி-17 விமானப்படை விமானத்தை அனுப்ப இந்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், அதற்கு சீனா மறுப்பு தெரிவித்ததால் திட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க :கொரோனா வைரஸ் எதிரொலி - மருத்துவத் துறையில் முதலீடுகள் அதிகரிப்பு?