இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏஎன்-32 ரக விமானம் கடந்த 3ஆம் தேதி அஸ்ஸாமிலிருந்து அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஷியோமி மாவட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றது. இந்நிலையில் பயணத்தைத் தொடங்கிய அரை மணி நேரத்தில் அந்த விமானத்துடனான தொடர்பு விட்டுப்போனது. இதையடுத்து மாயமான அந்த விமானத்தைத் தேடும் பணியில் விமானப் படையினர் ஈடுபட்டு வந்தனர்.
விமானம் மாயமான பகுதி அடர்ந்த மலைப்பகுதி என்பதால், விமானத்தைத் தேடுவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற தேடுதல் பணியில் அருணாசலப் பிரதேசத்தின் லிபோ என்ற இடத்துக்கு வடக்கில் 12 ஆயிரம் அடி உயரத்திலுள்ள வனப்பகுதியில் அந்த விமானத்தின் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன
இந்நிலையில் விமானத்தில் பயணம் செய்த 13பேரும் இறந்து விட்டதாக கடந்த 13ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இறந்தவர்களின் உடல்களைத் தேடும் பணியில் விமானப் படையினர் ஈடுபட்டனர். இந்நிலையில் முதலில் ஆறு பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்ட மீட்புப் படையினர் மீதமுள்ள ஏழு பேரின் உடல்களை இன்று மீட்டனர்.