புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கும் துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் மோதல் இருந்துவருவது அனைவருக்கும் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில் நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய ஆவர் 'புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மிசோர பகுதியில் பணிபுரிந்தபோது தனது மகளுக்காக ஒரு மருத்துவ சீட்டை முறைகேடாக பெற்று அவர் அந்த மாநில உரிமையை தடுத்து அந்த இடத்தை வீணடித்தார். விமானத்தில் சாதாரண வகுப்பில் சென்று சிறப்பு வகுப்பில் சென்றதாக கூறி அந்த பணத்தை அவர் பெற்றுள்ளார். கடந்த 40 நாள்களாக ஆளுநர் மாளிகையை விட்டு வெளியே வராமல் உள்ளார்.
கிரண்பேடி பதவி ஏற்று கடந்த 4 ஆண்டுகளில், புதுச்சேரிக்கு மத்திய அரசிடமிருந்து எவ்வளவு தொகையை பெற்றுத்தந்தார் என்று அவரால் கூற முடியுமா? என கேள்வி எழுப்பினர். இவ்வாறு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது அடுக்கடுக்கான புகார்களை அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் அவரது பேச்சுக்கு பதிலடி தரும் வகையில் ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ் அப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஊடகங்களில் எனக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
எனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு நான் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. நான் சாவல் விடுகிறேன் யார் வேண்டுமென்றாலும் என் வாழ்க்கையின் பக்கத்தை படிக்கலாம். அது எனது முழு வாழ்க்கையின் வரலாறை சொல்லும். எனது பணி மற்றும் வாழ்க்கையை சுயாதீன ஆய்வு செய்து அமைதிக்கான நோபல் பரிசுக்கு இணையான மக்சாய்சாய் விருது வழங்கப்பட்டது' இவ்வாறு பதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மகளுக்காக மருத்துவச் சீட்டை முறைகேடாகப் பெற்ற கிரண்பேடி! - அடுக்கடுக்காக புகார் கூறும் அமைச்சர்