கர்நாடகாவில் 14 மாதங்கள் ஆட்சியில் இருந்த மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றதன் மூலம் குமாரசாமி பதவி விலகினார். இதையடுத்து, பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பா முதலமைச்சராகப் பதவி ஏற்றார். இதனைத் தொடர்ந்து, குமாரசாமி அரசியலில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, "அரசியலில் இருந்து விலகுவது குறித்து யோசித்து கொண்டிருக்கிறேன். நான் அரசியலில் திடீரென்று வந்தேன். தற்செயலாக முதலமைச்சர் பதவி கிடைத்தது. இரண்டாவது முறை முதலமைச்சராக கடவுள் வாய்ப்பளித்தார். நான் யாரையும் திருப்திபடுத்தத் தேவையில்லை. மாநில வளர்ச்சிக்காக 14 மாதங்கள் உழைத்தேன்" என்றார். குமாரசாமியின் அறிவிப்பால் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.