நாட்டில் வெங்காய விலையேற்றத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பிரச்னையை நாடாளுமன்றத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. சுப்ரியா சுலே எழுப்பினார். அப்போது அவர், “வெங்காயம் உற்பத்தி செய்பவர் ஒரு எளிய விவசாயி. அரசு அவர்களைப் பாதுகாக்க வேண்டும்” என்றார்.
இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது சுப்ரியா சுலே, “நீங்கள் (அதாவது நிர்மலா சீதாராமன்) எகிப்து வெங்காயங்களை உண்பீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், “நான் அதிக அளவில் வெங்காயம், பூண்டு சாப்பிட மாட்டேன். ஆகவே எனக்கு கவலை இல்லை. நான் வெங்காயத்துடன் அதிக சம்பந்தம் இல்லாத குடும்பத்திலிருந்து வந்தவள்” என்றார்.
வெங்காயத்தை அதிகம் உட்கொள்ளக்கூடாது என்பது பற்றி சுருக்கமாகக் கூறிய நிர்மலா சீதாராமன், அதன் பின்னர் அரசின் கொள்கைகள் குறித்து விரிவாகக் கூறினார். அப்போது அவர், “2014ஆம் ஆண்டு முதல் வெங்காய சந்தைகளில் ஏற்றத் தாழ்வுகளைக் கண்காணிக்கும் அமைச்சர்கள் குழுவில் நானும் ஒரு பகுதியாக இருந்துள்ளேன். உபரி உற்பத்தியின்போது அதனை ஏற்றுமதி செய்ய, ஒரேநாள் இரவில் கூட நடவடிக்கை எடுத்துள்ளோம்.
ஆனால் தற்போது உற்பத்தி பற்றாக்குறை உள்ளது. இதனால் வெங்காயம் தொடர்பான கட்டமைப்பு கடுமையான சிக்கலாகி உள்ளது. வெங்காயம் உள்ளிட்ட பொருள்களை நீண்ட நாள்கள் சேமித்து வைத்த மேம்பட்ட சேமிப்பு முறைகள் நம்மிடம் இல்லை.
வெங்காயத்தை நவீன முறையில் சேமிக்க வேண்டும். அதற்கான வேலைகள் நடந்துவருகிறது. நம்மிடம் அதற்கான திறன்கள் உள்ளது” என்றார்.
இதையும் படிங்க: வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை