தனது கணவர் இறப்பின் உண்மை நிலை குறித்து அறிய தெலங்கானாவைச் சேர்ந்த ஆலம்பள்ளி மாதவி என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அம்மனுவில், "எனது பெயர் ஆலம்பள்ளி மாதவி. எனது கணவர் பெயர் மதுசூதன் (42). அவர் அரிசி ஆலை ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதியன்று அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்ட காரணத்தால் அவரை கிங் கோட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தோம். அப்போது அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து, அவருக்கு அதிநவீன சிகிச்சையளிக்க வேண்டுமெனக் கூறி, அவரை அரசின் காந்தி மருத்துவமனைக்கு மாற்றினர். அவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதை அடுத்து எனக்கும், எங்களது இரண்டு மகள்களுக்கும் கோவிட் -19 கண்டறிதல் சோதனை செய்யப்பட்டது.
அதில், எங்களுக்கும் பாதிப்பு உறுதியானதை அடுத்து நாங்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோம். இந்நிலையில், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகக் கூறி, எங்கள் மூவரையும் மே 16ஆம் தேதி அன்று காந்தி மருத்துவமனையில் இருந்து வீட்டுச்செல்ல அனுமதித்தனர்.
அப்போது, எனது கணவர் எங்கே ? அவருடைய உடல்நிலை எப்படி இருக்கிறது ? என மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டேன். அதற்கு அவர்கள், எனது கணவர் மதுசூதன் கோவிட்-19 நோயின் தீவிரத்தால் மே 1 ஆம் தேதியன்று இறந்துவிட்டார் என கூறினர். எங்களால் இதனை நம்ப முடியவில்லை.
அவர் கரோனா பாதிப்பின் காரணமாக தான் உயிரிழந்தாரா ? அது உண்மை எனும் பட்சத்தில் அவரது மரணம் குறித்து எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏன் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்பது குறித்து அரசு தெளிவுப்படுத்த வேண்டும். தனது சந்தேகங்களை எல்லாம் தெளிவுப்படுத்த மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை வியாழக்கிழமை (மே.5) உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, மதுசூதன் இறப்பு குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்ககோரி விசாரணையை நேற்று(ஜூன்.6) ஒத்திவைத்தது. நேற்று மீண்டும் விசாரணைக்கு இந்த வழக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் காந்தி மருத்துவமனையின் கண்காணிப்பாளர் எம்.ராஜராவ் அளித்த அறிக்கையை முன்வைத்து பதிலளித்தார்.
கண்காணிப்பாளர் எம்.ராஜராவ் அளித்த அறிக்கையில், ' காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மதுசூதன் கோவிட் -19 நோய் பாதிப்பின் காரணமாக ஏற்பட்ட நிமோனியாவால் அவரது உடல்நிலை மோசமடைந்து, மே1ஆம் தேதியன்று உயிரிழந்துவிட்டார். மருத்துவமனை நடைமுறையின் படி, அவரது உடல் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவரது உடலைப் பெற குடும்பத்தைச் சேர்ந்த எவரும் முன்வராத காரணத்தால் ஹைதராபாத் மாநகராட்சி (ஜிஹெச்எம்சி) அவருக்குச் செய்ய வேண்டிய இறுதி சடங்குகளைச் செய்து, அவரது இறுதி நிகழ்வை முடித்து வைத்தனர்." என கூறப்பட்டிருந்தது.
இதை ஏற்ப மறுத்த ஆலம்பள்ளி மாதவியின் தரப்பு வழக்குரைஞர், " மதுசூதன் மரணம் குறித்து குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகளின் கூற்றை ழுதுமையாக மறுக்கிறேன். அவர்கள் யாருக்கு தகவல் கொடுத்தார்கள், யாரிடமிருந்து இறுதி சடங்குகளைச் செய்ய ஒப்புதல் பெற்றார்கள் என்பதற்கான ஆதாரங்களை அவர்கள் காண்பிக்கட்டும்.
அவரது மரணம் மற்றும் இறுதி சடங்குகளுக்கு அலுவலர்கள் ஆதாரம் காட்ட வேண்டும் " என்று அவர் கூறினார். இது குறித்து பேசிய ஆலம்பள்ளி மாதவி "நான் என் கணவரைப் பற்றி விசாரித்தேன், அவர் மே 1 அன்று இறந்ததால் தகனம் செய்யப்பட்டார் என்று அவர்கள் சொன்னார்கள்.
புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் வடிவில் ஆதாரத்தை நான் காட்டச்சொல்லி வலியுறுத்தினேன். ஆனால், அவர்களிடம் எதுவும் இல்லை. என் மகள்களும் நானும் அவர் உயிருடன் இருப்பதாக நம்புகிறோம். மருத்துவமனை எங்களுக்கு நாங்கள் கோரும் ஆதாரங்களைக் காட்டினால் மட்டுமே அவர் இறந்ததாக சொல்லப்படுவதை நாங்கள் ஏற்க முடியும்." என்று அந்த பெண் கூறினார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட உயர் நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை தேதிக் குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டது.