தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் மல்லேஷ்வர் ராவ். பி.டெக். பட்டதாரியான இவர் கடந்த ஒன்பது ஆண்டு காலமாக உணவுக்கு வழியில்லா மக்களுக்கு நாள்தோறும் உணவை ஏற்பாடு செய்து வழங்கி வருகிறார்.
2011ஆம் ஆண்டு கல்லூரி படிக்கும்போது, பகுதி நேரப் பணியாக கேட்டரிங் (உணவுப் பறிமாறும் பணி) வேலைக்கு சென்றார். அங்கு ஏராளமான உணவுகள் வீணாவதைக் கண்ட அவருக்கு அவற்றை உணவில்லாத பலருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது.
பின்னர், கேட்டரிங் நிகழ்வுகளில் மீதமாகும் உணவுகளை பொட்டலங்களாகக் கட்டி, அதனை முடிந்து வீடுத் திரும்பும் வழியில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்குக் கொடுத்து வந்தார்.
தொடர்ந்து, மல்லேஷ்வர் ராவின் இந்த பணியை கண்ட அவரது நண்பர்கள் பின்னாளில் அவருடன் இணைந்து மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். இவ்வாறாக கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஹைதராபாத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விளிம்பு நிலை மக்களுக்கு உணவளிக்கும் உன்னத பணியைத் தங்கு தடையின்றி செய்து வருகிறார்.
'உணவை வீணாக்காதீர்' என்ற முழக்கத்தை முன்னிறுத்தி இந்த சீறிய பணியை மேற்கொண்டுவரும் அவருடன் தன்னார்வத் தோழமைகளும் இணைந்து செயல்பட ஆரம்பித்து இப்போது அது ஒரு அமைப்பாகவே மாறிவிட்டது.
இது தொடர்பாக நமது ஈடிவி பாரத்திடம் பேசிய அவர், “முதன்முதலில், எனது இந்த யோசனையை பகிர்ந்துக் கொண்டபோது, பலரிடமிருந்து கடும் விமர்சனங்கள் மட்டுமே வந்தன. அப்போது, சில நண்பர்கள் மட்டும் என்னையும், நான் கூறியத் திட்டத்தையும் ஏற்றனர். அவர்களுடன் இணைந்து நிகழ்வுகளில் மீதமாகும் உணவுகளை சிறிது பொட்டலங்களாகக் கட்டிக்கொண்டு தெருக்களில் உள்ள மக்களிடையே விநியோகித்தேன். அப்படித்தான் தொடங்கியது இந்த அமைப்பு.
ஒவ்வொரு நாளும் ஏராளமான உணவு வீணாக்கப்படுகிறது. ஆனால் அதுவே ஏழைகளுக்குக் கிடைக்க வழி ஏற்பட்டால், அது அவர்களது வயிறை நிரப்பும். எல்லா நாள்களுமே நிகழ்ச்சிகள் நடைபெறாது. அப்படி நிகழ்ச்சிகள் நடைபெறாத நாள்களில், உணவகங்களுடன் பேசி அங்கு வீணாகும் உணவை எங்களுக்கு கொடுக்க கோரிக்கை விடுத்தோம். அவர்கள் தரும் மீதமான உணவை மக்களுக்கு வழங்கத் தொடங்கினோம். இவ்வாறாக நாள்தோறும் சுமார் 2000 பேருக்கு உணவளிக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.
![நாள்தோறும் 2,000 வறியவர்களுக்கு உணவளிக்கும் பி.டெக். பட்டதாரி இளைஞரின் வேண்டுகோள்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9853694_asdas.jpg)
ஒவ்வொரு நாளும் நிறைய உணவு வீணடிக்கப்படுகிறது. அதே உணவு ஒரு ஏழை மனிதனின் வயிற்றை நிரப்ப முடியும். எல்லோரும் உணவு தானம் செய்ய முன் வந்தால், யாரும் வெறும் வயிற்றில் தூங்க வேண்டியதில்லை” என்கிறார்.
உணவில்லாத மக்களுக்கு உணவு அளிக்கும் 'உணவை வீணாக்காதீர்' அமைப்பு செயல்பாடுகளோடு மட்டும் நின்றுவிடாமல், குடிசை வாழ் பகுதி மக்களிடையே குழந்தைக் கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் ‘கனெக்ட் ஹோப்’ என்ற தன்னார்வ அமைப்பிலும் உறுப்பினராக மல்லேஷ்வர் ராவ் செயலாற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : திருமண நிகழ்ச்சிக்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் - குஜராத் அரசு