ஹைதராபாத்தைச் சேர்ந்த சையது ஆசிப் கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஓட்டுநராக வேலைக்காக சவுதிக்குச் சென்றுள்ளார். 1800 ரியால் (ரூ. 33,500) சம்பளம் என்று கூறி அவரை அழைத்துச் சென்ற முகவர்கள் மாதம் 1200 ரியால் (ரூ. 22,000) மட்டுமே தந்துள்ளனர்.
மேலும், இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து வேலை செய்து வந்த போதிலும், அவருக்கு விடுப்பு அளிக்கப்படவில்லை. இந்நிலையில் சையதின் தாயார் மரணமடைந்ததால் தனக்கு விடுமுறை அளிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். அதற்கும் விடுமுறை அளிக்க மறுக்கவே, சையது சவுதியில் உள்ள இந்தியத் தூதரகத்தை நாடியுள்ளார்.
இதனையடுத்து இந்தியத் தூதராக்கத்தின் உதவியுடன் ஊர் திரும்பும்போது, சக ஊழியரிடம் இருந்து சையது 65,000 ரியால் (12 லட்ச ரூபாய்) திருடிவிட்டதாகக் கூறி விமான நிலையத்தில் சவுதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனால் சையதின் மனைவி பேகம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுராஜிடம், தனது கணவர் ஏழு மாதம் சிறையில் அவதியுற்றுவருவதாகவும், அவரை காப்பாற்றித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.